November 22, 2024

சீன பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா ஜூன் 16 முதல் தடை

சீனாவின் பயணிகள் விமானங்களுக்கு வரும் ஜூன் 16 ஆம் திகதி தொடக்கம் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் சலுகையாக சீனாவுக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானசேவைகளை ஆரம்பிப்பதை சீனா மறுத்ததற்கு தண்டனையாக இந்தத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த இரு நாடுகளும் அண்மைய வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஹொங்கொங்கில் சீனாவின் கொள்கை தொடர்பில் முறுகலில் உள்ளன.
எயார் சைனா, சைனா ஈஸ்டரன் ஏர்லைன் உள்ளிட்ட 7 சீன நிறுவனங்கள் இந்தத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அமெரிக்காவின் யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்வைலன்ஸ் சீனாவுக்கு சேவையை மீண்டும் ஆரம்பிக்க விண்ணப்பித்திருந்தன. ஆனால் அவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்தத் தடை அமுல்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டி உள்ளது.
அவர் சீனா நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதோடு கொரோனா வைரஸ் மற்றும் ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களை கையாள்வது தொடர்பிலும் சீனா மீது அண்மைக் காலங்களில் குற்றம் சுமத்தி வருகிறார்.
ஜனவரி மாத நிலவரப்படி அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் பரஸ்பரம் வாரத்துக்கு சுமார் 325 விமானங்களை இயக்கி வந்தன. ஆனால் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அது 20 என்ற அளவுக்கு குறைந்தது. அதுவும்கூட, அனைத்துமே சீனாவைச் சேர்ந்த விமான நிறுவனங்களின் இயக்கம் என்று கூறப்படுகிறது.
Image may contain: airplane
2