November 21, 2024

சுவிஸ் போதகர்: மறவன்புலோவுக்கு எதிர்ப்பு!

சுவிஸ் மதகுருவின் அரியாலை தேவாலயம் தொடர்பில் கேள்வி எழுப்பிய இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தத்திற்கு நல்லூர் பிரதேச சபை கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அரியாலை பிலதெல்பியா தேவாலயத்தில் சுவிஸிலிருந்து வருகை தந்த  மதபோதகரொருவர் ஆராதனை நடாத்தியிருந்தார். அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அவரால் தான் யாழில் கொரோனாத் தொற்றுப் பரப்பப்பட்டதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதனையடுத்துக் குறித்த தேவாலயத்திற்கு யார் அனுமதி வழங்கியது? என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் விசனங்களும் வெளியாகியிருந்தன.
இதன் எதிரொலியாக அரியாலை பிலதெல்பியா தேவாலயம் தொடர்பாக முழுமையான தகவல்களைச் சபைக்குத் தெரியப்படுத்துமாறு நல்லூர் பிரதேச சபையின்  ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கு. மதுசுதன் நல்லூர்  பிரதேச சபை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு சபையின் ஆளுகைக்குட்பட்ட இலக்கம்-724 கண்டி வீதி அரியாலை எனும் முகவரியைச் சேர்ந்த  திரு. சிவராசா சற்குணராசா என்பவரால் நிலப்பரப்பு 54 உறுதி 11.4 இல் தேவாலயம் அமைக்க 2005 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம்  26 ஆம் திகதி விண்ணப்பிக்கப்பட்டுத் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் அறிக்கை, சுகாதார வைத்திய அதிகாரியின் அறிக்கை,  வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட சிபார்சின் அடிப்படையில் அன்றைய செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டது.
குறித்த  விண்ணப்பத்தின் திருத்திய வரைபடம் 25.08.2011 இல் மீளச் சமர்ப்பிக்கப்பட்டு  உரிய சிபார்சுகளுடன் 2012 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் 10 ஆம் திகதி அன்றைய தவிசாளரினால் தேவாலயத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2011. 09. 02 ஆம் திகதிய கடிதம் மூலம் கோவை கமநலசேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் கமநல சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. அமைச்சின் அனுமதி பெற வேண்டுமென்ற விடயம் 2005 இல் அமுல்படுத்தப்பட்டிருப்பின் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்தப் பதிலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டில் நல்லூர் பிரதேச சபை அமைந்த பின்னர் நாங்கள் அரியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு எந்தவிதமான அனுமதிகளையும் வழங்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவே நான் இவ்வாறான கேள்வியை எழுப்பியிருந்தேன் என  நல்லூர் பிரதேச சபையின்  ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கு. மதுசுதன் மேற்படி அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சபைக்கு வெளியேயிருந்து மறவன்புலவு சச்சிதானந்தன் குறித்த தேவாலயத்திற்கு  முன்பாக நின்றவாறு எங்கள் சபையைக் கேள்விக்குட்படுத்தியிருந்தார். ஆனால், நாங்கள் 2018 இல்  தீர்மானிக்கப்பட்டு வந்த பின்னர்  எந்தவிதமான அனுமதியையும் சட்டவிரோதமாக வழங்கவில்லை என்பதை அவர் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த விளக்கமும் இல்லாமல் வீதியில் நின்று எங்கள் சபையைக் கேள்விக்குட்படுத்திக் கொண்டிருக்க முடியாது எனவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இப்படியானவர்கள் இதுதொடர்பான கேள்விகளை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக சபைக்கு எழுத்துமூலமாகத் தெரிவித்துத் தகவல்களைப் பெற்ற பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தின் மூலம் எங்கள் சபையைக் கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். ஆகவே, தயவு செய்து வெளியிலிருந்து விமர்சிப்பவர்கள் உரிய ஆவணங்களைத் தயார்படுத்தி விட்டு எங்களை விமர்சிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.