எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம்..மகிந்த அணி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் 150 ஆசனங்களை கைப்பற்றியே தீருவோம் என சூளுரைத்துள்ளார் மகிந்த அணியில் கூட்டுச்சேர்ந்துள்ள முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவருமான வாசுதேவ நாணயக்கார.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கட்சி காரியாலயத்தில் நேற்று அவர் நடத்திய தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
புதிய அரசியலமைப்பை முழுமையாக மாற்றி பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். பாராளுமன்றத்தினூடாக புதிய ஜனாதிபதி தெரிவாக வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வெளியிடப்பட்ட பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களுடன் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைக்கப்படும்.
இதில் கொரோனாவிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான யோசனை புதிதாக இணைக்கப்படும்.
‘கோட்டாபய நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் தொனிப்பொருளில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய 10 விடயங்களை அடிப்படையாக வைத்து ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கல், கலப்பு மற்றும் அணிசேரா வெளிநாட்டுக்கொள்கை, தூய்மையான அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசியல் அமைப்பு திருத்தம், சிறந்த பிரஜை, வளமான மனித வளம், மக்களை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரம், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம், பௌதீக வள அபிவிருத்தி, நிலையான சுற்றாடல் முகாமைத்துவம், ஒழுக்கமுள்ள மற்றும் சிறந்த குணமுள்ள சமூகத்தை உருவாக்கல் என்பன ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு அவை பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதில் பொதுஜன பெரமுன கூட்டணி கட்சிகளின் யோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.