November 24, 2024

தமிழர்களை அவமானப்படுத்திய ரணில்…!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர், நவீன் திசாநாயக்கா. இது நாடறிந்த விஷயம்.

இன்று இவருக்கு தனது கட்சியின் தோட்டத்துறை தொழிற்சங்கத்தில் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் நவீனுக்கு உடந்தையாக தானும் இருந்துள்ளதை வெட்கமில்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தனது முன்னாள் பிரதமர் பதவிக்கு உத்தரவாதம் வழங்கி, ஆட்சியமைக்க பெருவாரியாக வாக்களித்த மலையக மக்களை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்மூலம் இன்று அவமானப்படுத்தியும் உள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நியமனங்கள் எங்களுக்கு தேவையற்ற விடயம். அதையிட்டு அக்கறை கொள்ள எங்களுக்கு நேரமும் கிடையாது. ஆனால், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆட்சி அமைக்க அதிகம் வாக்களித்தது, தமிழ் மக்கள் என்பதை அவர் மறக்க கூடாது. அதிலும் அதிகபட்ச வாக்குகளை தந்த மாவட்டம், நுவரெலியா மாவட்டம் என்பதையும் அவர் மறக்க கூடாது. அவர் மறந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நவீன் திசாநாயக்கா மறக்க கூடாது.

பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தோட்ட கம்பனிகளின் ஏஜண்டாக செயற்பட்டு, தமிழ் தோட்டத்தொழிலாளர் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக இருந்து துரோகம் செய்தவர் இந்த நவீன் என்பது நாடறிந்த விஷயம்.

இது மட்டுமல்ல. தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடமைக்க, காணி தருவதிலும் நவீன் திசாநாயக்க பெரும் தடைகளை ஏற்படுத்தினார். அரசாங்கத்துக்குள் சண்டையிட்டே இந்த காணிகளை நாம் பெற்று வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்தோம்.

இந்நிலையில், இந்த நவீன் திசாநாயக்கா எவருக்கு துரோகம் செய்தாரோ, அதே தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க தலைவராக அதே நவீன் திசாநாயக்காவையே வெட்கமில்லாமல், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இதன் மூலம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார். இது நடக்காது. நடப்பது என்னவோ, தமிழ் மக்களிடம் தனக்கு எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முற்றாக இழக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.