நான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன்
இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடையே அவர் கருத்து வெளியிடுகையில் 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். அபிவிருத்தி விடயத்தில் வடக்கு, கிழக்கிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. நிலம் விடுவிக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் முன்னேற்றங்களாக நாம் கருதுகிறோம்.
ஆனால், முழுமையாக எதையும் நாம் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்பு நகல் வடிவம் நாடாளுமன்றத்திற்கு வந்தாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. அரசியல் கைதிகள், நிலம் விடுவிப்பு, அபிவிருத்தி திட்டங்கள் எதிலும் முழுமையடைகாமல், மக்கள் முன் சென்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.
2015 தேர்தலிற்கும் முற்றும் மாறான ஒரு தேர்தல் இது. 2015 ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட நன்மையை தொடர்ந்து பேண முடியாத நிலையில், பழைய ஆட்சியாளர்களிடமே ஆட்சி சென்றுள்ளது. வரும் தேர்தலிலும் அவர்கள் பலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஜனாதிபதி எடுத்துள்ள சில முடிவுகள், அவரது ஆட்சி எப்படியாக அமையுமென்பதை காண்பிக்கிறது. கிழக்கில் மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தாலும், கிழக்கு தொல்பொருள் செயலணியில் தமிழர்கள், சிங்களவர்கள் இணைக்கப்படவில்லை. அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்றவர் என சொல்லப்படும் எல்லாவல மேதானந்த தேரர் அதில் உள்ளார். அவரது கருத்து முழுவதும், இந்த பிரதேசங்கள் முழுவதும் சிங்கள பௌத்த பிரதேசங்கள், அவர்களின் மேலாதிக்கம் பேணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளவர். இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.
நாம் அரசாங்கத்தை உருவாக்கிய போது கூட அரசில் இணையவில்லை. எமது இனப்பிரச்சனை தீர்வு குறித்து நீண்டதூரம் பயணித்துள்ளோம். அப்படியான சூழலில், அதை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வு எமது அபிலாசைகளை தீர்க்குமாக இருந்தால் நிச்சமாக ஆதரவை கொடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.