September 21, 2024

யாழில் கொரோனா பரவும் சாத்தியங்கள் குறைவு!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன அவ்வாறு இடம் பெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக வடக்கில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் போது ஒரு சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே வடக்கிலுள்ளவர்களுக்கு கொரோனாப் பரவல் தற்போதைய நிலையில் இல்லை என்று உறுதியாகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள இந்தியப் பிரஜை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் அறியக் கிடைத்துள்ளது இதனையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக இந்தியப் பிரஜை தங்கியிருந்த வீடு அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.