இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி,
தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன.
எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர்கள் அனைவரும் சிங்கள பௌர்த்தர்களாக காணப்படுகின்றனர்.
இதையடுத்தே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்கள்
ஜனாதிபதி செயலணியில் இரண்டு பௌத்த மதகுருமார்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி,பேராசிரியர்கள், தொல்பொருள் ஆணையாளர் நாயகம், நில அளவையாளர் நாயகம், பிரபல ஊடக நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்டவர்கள் அங்கம் பெறுகின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் காணப்படும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்களை பாதுகாத்தல் மற்றும் மீள் நிர்மாணம் செய்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றுதல், தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடங்கள் காணப்படும் நிலங்களை அளவீடு செய்து, அவற்றை சட்ட ரீதியிலான இடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களை இந்த செயலணி செய்வுள்ளது.
மனோ கணேஷன் எதிர்ப்பு
இலங்கையில் தொல்பொருள் சின்னங்கள் முழுமையாக சிங்கள பௌத்த வரலாற்றை தழுவியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் பிழையானது என முன்னாள் அமைச்சரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியில், பௌத்தர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் முழுமையான சிங்கள பௌத்த வரலாறு கிடையாது எனவும் அவர் கூறினார். இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் சொந்தமான பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழர்களை பொருத்தவரையில் தொன்மை என்பது வெறுமனே தமிழ் இந்து என்ற வரையறைக்குள் மட்டுமல்லாமல், தமிழ் பௌத்தம் என்ற வரையறைக்குள்ளும் வருவதாக அவர் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்கள் என அடையாளப்படுத்தப்படும் பெரும்பாலான சின்னங்கள் தமிழ் பௌத்த சின்னங்களாகவே காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் பௌத்த சின்னங்கள் கிடைத்தால், அது சிங்கள பௌத்த சின்னங்கள் என கூறுவது பிழையான விடயம் என மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.
பௌத்தம் என்றால், அது சிங்களம் கிடையாது என கூறிய அவர், பௌத்தத்தின் புராதன மொழி பாலி மொழி எனவும் கூறினார்.
இந்த நிலையில், பௌத்த தேரர்கள், ராணுவ அதிகாரிகள், பௌத்த சிந்தனை கொண்டவர்களை இணைத்து ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதானது, நாட்டை முழுக்க முழுக்க பௌத்த மயப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூர நோக்கை வெளிப்படுத்துவதாக அமைவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான ராஜபக்ஷவின் சிந்தனைகளையே தாம் எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருட்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், அந்த மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தின் பாரம்பரியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை போன்றதொரு எண்ணம் தோன்றுவதாக ஊடகவியலாளர்கே.எம்.ரசூல் தெரிவிக்கின்றார்.
சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்களும் இந்த செயலணியில் அங்கம் பெறுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பௌத்த பாரம்பரிய சின்னங்கள் இருப்பதாக கூறி, தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துவதை போன்றதொரு தோற்றமே எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு இந்த செயலணியினால் வழங்கப்படும் கடமைகள் அல்லது பொறுப்புக்களை அவர்கள் நிறைவேற்றாத பட்சத்தில், அது தொடர்பில் நேரடியாக தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி இந்த செயலணிக்கு வர்த்தமானி ஊடாக உத்தரவுபிறப்பித்துள்ளார்.
இந்த விடயமானது, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்தான ஒரு விடயமாக அமையலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் கூறுகின்றார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு
இலங்கை போன்ற பல்வேறு சமூக மக்கள வாழும் நாடொன்றில், மக்களின் பாரம்பரியத்தை பிரபலிக்கும் தொல்பொருள் போன்ற விடயங்களுக்கான செயலணிகள் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால், அதில் மூவின மக்களும் இடம்பிடிக்க வேண்டியது கட்டாயமான விடயம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமை செயற்பட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.
அவ்வாறின்றி, சிங்கள இனத்தவரை மாத்திரம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சந்தர்ப்பத்தில், அது சிங்கள இனத்திற்கு சார்ந்த முடிவுகளாக அமையும் என்ற சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதுமாத்திரமன்றி, இந்த செயற்பாடு தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கு சமத்துவத்தை வழங்கவில்லை என்பதை பிரதிபலிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான செயலணியில் அனைத்து இனத்தவரும் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில்,தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவரின் வரலாறு, அடையாளங்கள் சிதைக்கப்படும் அல்லது மறைக்கப்படும் என்ற சந்தேகம் எழாது என அவர் கூறுகின்றார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த செயலணி, ஜனாதிபதிக்கு மாத்திரமே பதில் கூறும் வகையில் உள்ளதாகவும், அதனால் அதன் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இந்த செயலணியை பௌத்த சமய பிரதிநிதிகள் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமையினால், ஏனைய சமயங்கள் சமமாக கருதப்படவில்லை என்ற எண்ணமும் எழுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மூன்று இனத்தவரும் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில், சிங்கள இனத்தவர் மாத்திரம் தொல்பொருள் தொடர்பிலாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் பெறுவார்களேயானால், அதுவும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடு என அவர் கூறுகின்றார்.
அதுமாத்திரமன்றி, ஜனநாயக நாடொன்றில் ராணுவம் எந்தளவிற்கு தலையீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் காணப்படுகின்ற பின்னணியில், அனைத்து விடயங்களிலும் ராணுவம் உள்வாங்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த செயற்பாடானது ஜனநாயகத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணியின் ஊடாக இவ்வாறான அச்ச நிலைமைகள் தோன்றுவதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமை செயற்பட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை
இலங்கையிலுள்ள மரபுரிமைகள், இயற்கை வளங்கள் ஆகியன மனித செயற்பாடுகளினால் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் மற்றும் அம்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் இந்த செயலணியின் பொறுப்பு என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.