November 22, 2024

கிழக்கு மக்களை ஒரே இனமாக மாற்றும் ஒரு செயற்திட்டம் – விக்கி

Vigneswaran

கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக சிங்கள இனமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அவர் மேலும் கோத்தபாயவினால் உருவாக்கப்பட்ட செயலணிகள் குறித்து தெரிவிக்கையில்:-

கொரோனா வைரசின் தாக்கம் முற்றாக நீக்கப்பட முன் இவை நியமிக்கப்பட்டுள்ளதெனில் அதற்கு வெகுவான காரணங்கள் இருக்கவேண்டும். முதலாவது கிழக்கு மாகாணத்திற்கான செயலணியை எடுத்துக் கொள்வோம்.
அதில் பௌத்தர்கள் மட்டுமே இடம் பெறுவதாகத் தெரிகின்றது. பௌத்தபிக்குகள் பெருவாரியாக இடம்பெறுகின்றனர். இதன் அவசியம் என்னவென்று பார்க்கையில் கொரோனா வைரசைப் பாவித்து அண்மையில் எமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த 3000 ஆண்டுகால தமிழர்களின் கிழக்கு மாகாண இருப்பைக் கொச்சைப்படுத்தும் செயலாக இருக்கக்கூடும் என்றே நினைக்கின்றேன்.
அதாவது கிழக்கு மாகாணத்தில் மக்களை ஒரேயினமாக மாற்றவைக்கும் ஒருசெயற்றிட்டம் பலவருடகாலமாக இருந்து வருகின்றது. இதனை ஆங்கிலத்தில் Process of Ethno Centric Homogenization என்று அழைப்பார்கள். காலக் கிரமத்திலே கிழக்குமாகாணத்தில் வாழும் மக்களைச் சிங்களம் பேசுபவர்களாக மாற்றுவதும் முடியுமெனில் பௌத்தர்களாக மாற்றுவதுமே இதன் குறிக்கோள். மேல்மாகாணத்தில் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையில் சென்ற நூற்றாண்டில் இது நடந்தேறியது.
புத்தளம் வரையில் வாழ்ந்தஅந்ததமிழ்ப் பேசும் மக்கள் தற்போது சிங்களவர்களாகப் பரிணாமம் பெற்றுள்ளார்கள். தம்மைச் சிங்களவர்கள் என்று கூறும் அம்மக்களிடம் நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட அவர்களின் காணி உறுதிகளைக் காட்டச் சொல்லுங்கள்.
அவையாவும் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டிருப்பன. வயதில் மூத்தவர்கள் அதாவது 85-95 வரையிலான வயது கொண்ட முதியவர்களுடன் பேச்சுக் கொடுத்தால் அவர்கள் தமிழிலேயே உங்களுடன் பேசுவார்கள்.
ஆகவே சிங்களமயமாக்கல் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையில் சென்ற நூற்றாண்டே நடைபெற்று விட்டது. இப்பொழுது தமிழ்ப் பேசும் கிழக்கு மாகாண மக்களை மாற்ற எத்தனிக்கின்றார்கள். சிங்கள மொழியைப் பரப்பி தமிழை மறக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை திடீர் என்று வருபவை அல்ல. நன்றாகத் திட்டம் போட்டு நடைபெறுபவை.
பேராசிரியர்.பத்மநாதன், வட, கிழக்கில் காணப்பட்ட பல சரித்திரச் சான்றுகளை, தொல்பொருட்களை ஒரு கலாசார அருங்காட்சியகம் திறந்து அதில் காட்சிப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழகத்தவர்க்கும் அவர்களை வழிநடத்தும் குழு அங்கத்தவர்களுக்கும் பலகாலத்திற்கு முன்னர் சிபார்சு செய்திருந்தார். நிதி உதவிகோரி இந்திய மத்திய அரசுக்குக்கூட தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அது எமது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பின்னர் கைவிடப்பட்டது. திருகோணமலையில் சேனையூரில் பெருந்தூண்களில் பௌத்தம் பற்றி தமிழில் எழுதப்பட்டுள்ளது. கல்முனையில் நாக சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவர்களுக்கு முன்னரே நாகராகிய தமிழர் சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்கியமைக்குச் சான்றுகள் உள்ளன.
நாவற்குடா கோயில்க் கட்டடத்தில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள் 2500 வருடங்களுக்கு முன்பானதென்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிநாகன் பள்ளி என்பது தமிழ் பௌத்தர்களால் நடாத்தப்பட்ட பௌத்த வழிபாட்டுத்தலம். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம் சிங்களவர் இருந்த இடங்கள் என்று நிரூபிக்க குறித்த செயலணி நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
இப்பொழுது கூட அருங்காட்சியகம் கட்டுவதுபற்றி இந்தியஅரசாங்கத்துடன் நாம் பேசலாம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட செயலணியில் தமிழ் பேராசிரியர்களும் கிழக்குமாகாணத் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெறவேண்டிய அவசியத்தைநாம் செயலணிக்கு வலியுறுத்தலாம்.
இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள செயலணியானதுரூபவ் முழு ஏற்புடையதொன்று. படையினரையும் பொலிஸாரையும் உட்கொண்டதொன்றாகவுள்ளது. நாட்டில் ஒழுக்கமும் பாதுகாப்பும் ஏற்பட உருவாக்கப்பட்ட ஒருசெயலணி. அந்தச் செயலணியின் உருவாக்கம் நாட்டை சர்வாதிகாரம் நோக்கி நடத்திச் செல்லவும் ஒரு உபாயமாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. ஏனெனில்,
1. ஜனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் ஒருபோர் வீரர். ஆணைகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று சிந்திப்பவர். தாமே அந்த ஆணையாளராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்.
2. அதனால் தான் அவர் ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்த விழைகின்றார் என்று நினைக்கின்றேன்.
3. முக்கிய சிவில் பதவிகளுக்கு ஏற்கனவே அவர் முன்னைய படைவீரர்களை நியமித்துவிட்டார்.
இந்தச்செயலணி நியமிக்கப்பட்டவர்களை வழிநடத்த உதவும். கொரோனா வைரசைச் மையப்படுத்தி இந்தசெயலணியை அவசர அவசரமாக அவர் நியமித்துள்ளார்.
இலங்கைக்கெதிராக சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடும் என்ற நிலையில் தம்மைப் பதவியில் நிலைக்கச் செய்ய இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.
சர்வாதிகாரமானது தமிழர்களை மிகவும் பாதிக்கும். அதைவிட தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் பறிபோகும் நிலை இனி ஏற்படும். சீனாவுடனான உறவுமிகவும் அன்னியோன்யமாகும்.
இந்தியாவிற்கு அவரின் சீன உறவைத்துண்டிக்க முடியாமல் போய்விடும்.
தமிழர்களின் உரிமைகளைப் பெற இந்தியாகளம் புகுந்தால்த்தான் இந்தியாவின் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படும். எமது நாட்டு அரசியல்வாதிகளின் உண்மைச் சொரூபம் அறிந்தவர் பாரதப்பிரதமர் மோடி என்பதே எனது கணிப்பு. இரண்டு செயலணிகளுமே எம்மக்களுக்குப் பாதிப்புக்களைக் கொண்டு வரப் போகின்றனஎன்றுநம்பலாம்.
புதிய இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் போது எமது தேசியக் கூட்டணியினர் இவை பற்றி அவருடன் கலந்துரையாடுவர் என்றார்.