November 22, 2024

முப்படைகளின் உதவிகளுடன் பௌத்த மயமாக்கல் முன்னெடுப்பு – சுரேஸ்

Suresh Premachanran

சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில்:-

கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன் பின்னராக, ஆளுநர், அமைச்சின் செயலாளர், விசேட செயலணிகளின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், சிவில் நிறுவனங்களின் அதிகாரிகள் என்று முப்படையின் அதிகாரிகளே தொடர்ச்சியாக நியமிக்கப்படுகின்றார்கள். நியமனங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
இத்தகையதொரு பின்னணியில் கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்காக 11பேர் கொண்ட செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தசெயலணியின் மூலம், கிழக்கு மாகாணத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை முப்படையினரின் துணையுடன் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பிரதேசத்தினை முழுமையாக அபகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலன்கொண்ட மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியும் 13முப்படை அதிகாரிகள், பொலிஸார், முப்படையினரின் புலனாய்வு பிரிவினர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஒருபக்கத்தில் தேர்தலை நடத்துவதற்குரிய நகர்வுளைச் செய்துவரும் அரசாங்கம் மறுபக்கத்தில் இவ்வாறு செயலணிகளை நியமிப்பதன் ஊடாக தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளுக்கு முடக்கத்தினை ஏற்படுத்தவதற்கு திட்டமிடுகின்றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுகின்றது.
அதுமட்டுமன்றி இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக திரைமறைவாகச் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அச்சுறுத்தவும்ரூபவ் அடக்குவதற்கும் விளைகின்றதா?
தேர்தல்காலத்தில் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படுகின்றமையானது மறைமுகமாக ஜனநாயக செயற்பாடுகளை முடக்கி குரல்வளையை நசுக்குமொரு செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பானது தமிழ்த் தேசியப் பரப்பிலும் வடக்கு கிழக்கில் உள்ள அரசியல்ரூபவ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எவ்வளவு தூரம் தாக்கத்தினை செலுத்துகின்றதோ அதேயவிற்கு தென்னிலங்கையிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பிரதமர், அமைச்சரவை ஆகியவற்றுக்கு கட்டுப்படாது ஜனாதிபதியின் நேரடியான உத்தரவுகளுக்கு மட்டுமே கட்டப்படுவதாக இந்த செயலணிகள் உள்ளன. இத்தகைய அதிகாரத்தினைக் கொண்ட செயலணியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அமைச்சரவையோ அங்கீகரிக்கின்றதா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
இத்தகைய போக்கானது நாட்டில் ஜனநாயக முறைமையிலான செயற்பாடுகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கப்பதோடு சர்வதிகாரம் படிப்படியாக வளர்ச்சியடந்து இராணுவ ஆட்சியொன்றை ஸ்தாபிப்பதை நோக்கிச் செல்லவதாகவே உள்ளது. ஆகவே வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தினை விரும்பும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக மறுதலிப்பு செயற்பாடுகளுக்காக ஒன்றிணைய அணிதிரள வேண்டும் என்றார்.