November 22, 2024

ஊடகம் காட்டியும் கூட்டியும் கொடுக்கிறதா?

காலத்திற்கு காலம் இந்திய ஊடகங்களிற்கு ஈடாக தற்போது யாழ்ப்பாண ஊடகங்களும் பரபரப்பை தோற்றுவித்து கவனத்தை ஈர்த்துக்கொள்வது யாழில் கலாச்சாரமாகியிருக்கின்றது.
ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் முன்னாள் அரச அமைச்சரான அங்கயன் இராமநாதனின் தொலைக்காட்சியில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்துவிட அவரை உண்டு இல்லையென ஆக்கிவிட்டனர் மக்கள்.
இந்நிலையில் அதற்கு போட்டியாக ஜனாதிபதி கோத்தபாய மற்றும் அவரது ஆலோசகரும் முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவருமான கெந்தவிதாரணவின்  பினாமி தொலைக்காட்சியென அடையாளப்படுத்தப்பட்ட மற்றொரு தொலைக்காட்சியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் கூல் பொதுஜனபெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாமென சொன்னதை ஒளிபரப்ப அதனை தெற்கு ஊடகங்கள் தூக்கி பிடிக்க தொடங்கியுள்ளன.
ஏற்கனவே கூலை தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து தூக்கியடிக்க பொதுஜனபெரமுன முற்பட்டுள்ள நிலையில் தன்னை தானே புத்திசாலியாக சொல்லிக்கொண்டுள்ள கூல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றார்.
அவர் தன்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரிக்கின்ற பத்திரிகைகளின் தவறை சுட்டிக்காட்டியதும் தேர்தல் திணைக்களம் சந்திக்கும் பிரச்சனைகளை பேசியதும் நியாயமான கருத்துக்கள். ஆனால் பொதுஜனபெரமுனவிற்கு வாக்களிக்கவேண்டாமென தெரிவித்தமை பொருத்தமற்றதென கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் , எந்தவித பதவியிலிருந்து அந்த விமர்சனங்களை முன் வைக்கிறோம் என்பது முக்கியம். இலங்கையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள வெகுசில ‚சுதந்திரமான ‚ அமைப்புகளில் தேர்தல் ஆணைக்குழுவும் ஒன்று. அதில் உறுப்பினராக இருந்துகொண்டு , இவ்வகை விமர்சனங்களை முன் வைப்பது , தேர்தல் ஆணைக்குழுவினை பலவீனப்படுத்தும்.அதன் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும். அதன் ‚சுதந்திரமான ‚ நிலையை பலவீனப்படுத்தும். அந்த நிலை இலங்கையின் பலவீனமான ‚ஜனநாயக‘ நிறுவனங்களுக்கும் , ஜனநாயகத்துக்கு ஏற்படும் வீழ்ச்;சியாகுமெனவும் இன்னும் சில தரப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
எனினும் இனவாதத்தை மட்டும் முன்னிறுத்தும் கோத்தா தரப்பிற்கு இது தேவையாக உள்ளது.தென்னிலங்கையில் அது விற்பனை செய்ய பொருத்தமான பொருளுமாகும்.
அதற்கேதுவாக எடுத்தும் கூட்டியும் கொடுத்திருக்கின்றன ஊடகங்கள் என்கிறார் முன்னணி அரசியல் அவதானியொருவர்.