முல்லையில் மேலும் நிலப்பிடிப்பு?
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் நிலப்பிடிப்பில் வனவளத் திணைக்களம் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் மேலும் 13 ஆயிரம் கெக்ரேயர் நிலப் பரப்பினை தமக்கு உரித்தானது என அரச இதழ் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலே ஏற்கனவே பல தடவை அரச இதழ் மூலம் வனப் பகுதிகள் உரிமை கோரப்பட்டன. அதே போன்று போரின் பின்பும் வனவளத் திணைக்களம் 2012ஆம் ஆண்டு பெருந்தொகை நிலத்திற்கு அரச இதழ் பிரசுரித்திருந்தது. அந்த நிலையில் தற்போது மீண்டும் அரச இதழ் பிரசுரிக்கப்படவுள்ளது.
இதற்காக மட்டும் சுமார் 13 ஆயிரம் கெக்ரேயர் நிலத்தை அடையாளமிட்டுள்ளனர். அதாவது 13 ஆயிரம் கெக்ரேயர் எனில் 32 ஆயிரத்தையும் தாண்டிய ஏக்கர் நிலப்பரப்பு. இவ்வாறு அரச இதழ் பிரசுரிக்க குறித்த திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது வரைபடமாக்கும் பணியும் இடம்பெறுகின்றது. அவ்வாறு வரையப்படும் நிலப்பரப்புத் தொடர்பில் மக்களிற்கு பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது புதிதாக அரச இதழ் பிரசுரிக்க எண்ணும் இடத்தில் பெரும்;பகுதி வனப்பகுதியாக உள்ளபோதும் அதனை அண்டிய மக்களின் வாழ்வாதார நிலங்கள் கலாச்சார வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றுடன் மேச்சல்த்தரை , பொதுப் பாவனை நிலங்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டுவதோடு போரிற்கு முன்னர் மக்கள் வாழ்ந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியுள்ள நிலங்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு அரச இதழ் வெளியிடப்படவுள்ள நிலங்களில் அதிகமானவை புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியின் இரு மருங்கை அண்டிய பகுதிகள் மற்றும் முறிப்பு அளம்பில் பிரதேசங்களும் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பகுதியின் எல்லைப் பரப்புக்களும் உள்ளடங்குவதாகவே அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விரைவில் அரச இதழிற்கு அனுப்பபடலாம் என எதிர்பார்க்கப்படும் 13 ஆயிரம் ஏக்கரில. உச்ச பட்சமாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5 ஆயிரத்து 154 கெக்டேயரும் கரைத்துரைப்பற்றில் 3 ஆயிரத்து 392 கெக்டேயரும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 690 கெக்டேயரும் அடங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்புகளாக தேவிபுரம் , இருட்டுமடு , வள்ளிபுனம் , மயில்வாகனபுரம் என்பனவும் அடங்குவதாகவே தெரிகின்றது.
இதனால் வனவளத் திணைக்களத்தினர் அரச இதழ் பிரசுரிப்பதற்கு முன்பாக பிரதேச செயலகங்களில் உள்ள காணி உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலகத்தின் ஒப்புதலைப் பெற்றே இப்பணியை வனவளத் திணைக்களம் மேற்கொள்வதனை மாவட்டச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.