November 22, 2024

சித்திரவதை:இலக்கு வைக்கப்படும் முஸ்லீம் சமூகம்?

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மீது இலங்கை காவல்துறை சித்திரவதை மேற்கொண்ட விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான தர்கா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுவனை நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிறுத்தப்பட்டபோது, நீதிமன்ற மருத்துவ அதிகாரி பரிசோதனை மேற்கொள்வதற்குப் பதிலாக சிறுவனுக்கும் தந்தைக்கும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி ஏசியுள்ளதாக தெரியவருகின்றது.
நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ‚நீங்களே மாடறுக்கும் இனம், உங்களால் தான் கொரோனா தொற்று நோய் பிரச்சினையும்‘ என்று அவர் மோசமாக ஏசியதாக தாக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
கடந்த 2020 மே மாதம் 25ஆம் திகதி மாலை 4.50 தொடக்கம் 5.00 மணிக்கு இடையிலான நேரத்தில் குறித்த சிறுவன் சோதனைச் சாவடியொன்றுக்கு அருகே தாக்கப்பட்டதோடு, காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன் ஒரு அம்சமாகவே தாக்குதலுக்குள்ளான சிறுவன் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் அறிக்கையைப் பெறுவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்ததாவது,’மகன் பொலிஸாரால் தாக்கப்படுவதாக அருகில் இருந்தவர்கள் எனக்கு தகவல் கூறினர். நான் அங்கு விரையும் போது, மகனது கைகள் பின்னல் கட்டப்பட்ட நிலையில் பொலிஸார் மகனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். நான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்த முயன்றாலும் அங்கிருந்த பொலிஸார் கேட்கவில்லை. எம் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தாயும் இல்லாத நிலையில் மகனை நானே வளர்த்து வருகின்றேன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவம் செய்யப்பட்டு வருகின்றது. நாம் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையைப் பெற நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் சென்றோம். அங்கு நீதிமன்ற மருத்துவ அதிகாரி வாசகங்களைப் பயன்படுத்தி ஏசினார். பின்னரே எம்மை உள நல மருத்துவர் ஒருவரிடம் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார். குறித்த மருத்துவரிடம் சிறுவன் தனது சிறு வயதில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளதால் அவர் அறிக்கையை சமர்ப்பித்தார். எனினும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி, உள நல மருத்துவ அதிகாரிக்கு அழுத்தம் பிரயோகிப்பதும் விளங்கியது‘ எனத் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவிடம் கேட்டபோது, ‚சிறுவனின் தந்தை மேலதிக பரிசோதனைகள் தேவையில்லை என்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதனால், பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் தாக்கும் போது, குறித்த சிறுவன் உள நலம் குன்றியவர் எனத் தெரிந்திருக்கவில்லை. பின்னரே அவரது சுகயீனம் தெரியவந்துள்ளது. எனினும், குறித்த வீடியோ காட்சி உண்மையானது.‘ மேலதிக பரிசோதனைகள் தேவையில்லை என்றும் பரிசோதனைகளை இடை நிறுத்துமாறும் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியதாகக் கூறப்படுவது உண்மையா? என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையிடம் கேட்டபோது, ‚மகன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நான் பொலிஸ் நிலையத்திலும், ஏனைய இடங்களிலும் பாதிக்கப்பட்ட எமக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் தாக்குதலை நடத்திய பொலிஸார் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றுமே கூறினேன். பரிசோதனைகளை இடைநிறுத்தும்படி நான் கூறவில்லை‘ என்றார்.
இதேநேரம், சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதுதொடர்பான பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.