November 21, 2024

சத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…!

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனை இறுகி வரும் நிலையில், மிக ரகசியமாக அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா குவிக்கும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனாவுக்கு இடையே 2017 டோக்லா பிரச்சனைக்கு பின்னர், கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான பிரதேசங்களில் பயன்படுத்தும் வகையில் அதி நவீன ஆயுதங்களை சீனா உருவாக்கியுள்ளது.

டைப் 15 வகை டாங்கிகள், Z-20 ஹெலிகொப்டர்கள், ஜிஜே-2 ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவைகளையே சீனா அதிக கவனம் செலுத்தி வடிவமைத்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டு இந்த ஆயுதங்களை வடிவமைத்துள்ளதாக சீனா ராணுவ அதிகரிகள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் பத்திரிகைகளே தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு சீனாவுக்கும் எல்லைப் பகுதியில் பிரச்சனை இறுகி வரும் நிலையிலேயே, இந்த நவீன ஆயுதங்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆயுதங்களை இந்திய எல்லையில் சீனா குவித்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை என்றாலும்,

தேவை எனில் இந்த ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்க கால தாமதம் நேராது என ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

டைப் 15 வகை டாங்கிகளும் சீனாவின் அதி நவீன PCL-181 howitzer உள்ளிட்டவைகளை வடமேற்கு சீனாவின் திபெத்திய பகுதியில் ஜனவரி மாதம் நடந்த இராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்பட்டது.

டைப் 15 வகை டாங்கிகள் எதிரிகளின் கவச வாகனங்கள் முன்னேறுவதை தடுக்கவே பயன்படுத்த உள்ளனர்.

மேலும், ஜிஜே-2 ஆளில்லா விமானங்களால் தற்போது அதிக உயரத்தில் பறக்க முடியும் என்பதுடன் அதிக ஆயுதங்களையும் எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

திபெத் உள்ளிட்ட அதிக உயரம் கொண்ட பிரதேசங்களில் பல கிலோமீற்றர் நீண்ட எல்லையில் ரோந்துப் பணிக்காக இந்த ஆளில்லா விமானங்களை சீனா பயன்படுத்தி வருகிறது.

தற்போது திபெத்திய பகுதியில் இந்த ஆயுதங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக சீனா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நான்கிடங்களில் இரு நாடுகளின் ராணுவமும் நேருக்கு நேர் தயார் நிலையில் உள்ளன.

பான்கோக் ஏரி அருகாமையில் மே மாத துவக்கத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.

அந்த மோதலில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் காயமேற்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.