November 21, 2024

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும்..!! ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும்..!! ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி இதை தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்க மக்களே உங்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை உலகம் கேட்கிறது. உலக நாடுகள் உங்களுடன் நிற்கிறது.

அமெரிக்க அதிகாரிகளே உங்கள் மக்கள் மீதான வன்முறையை நிறுத்துங்கள், அவர்களை சுவாசிக்க அனுமதியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஈரான் மக்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்தார். இந்த நிலையில் ஈரானும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கவில் வெடித்த போராட்டம்

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் பொலிஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

மினியாபொலிஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவி பல பொலிஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலவரம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.