நிலத்தடி பதுங்கு குழிக்குள் பதுங்கினார் டிரம்ப்! 6வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்!
அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் இன்று 6வது இரவாக தொடர்கின்றன.
இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட போராட்டங்கள், கட்டுக்கடங்காமல் அமெரிக்க நகரங்கள் முழுவதும் பரவியதுடன், கோபத்தை வெளிப்படுத்தும் வன்முறைப் போராட்டங்களாக வெடித்துள்ளன.
அண்ணளவாக 40 நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறித்த 40 நகரங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் மக்கள் குறித்த ஊரடங்கை மக்கள் புறக்கணித்து வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4000 பேற்பட்ட போராட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகப் பிரிவு காவல்துறையினரும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.
போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் மிளகு விசிறல் போன்றவற்றைப் பயன்படுத்தினர்.
பெரும்பாலான இடங்களில் காவல்துறையினரின் வாகனங்கள் எரியூட்டப்பட்டன. வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
அவசரநிலைக்கான படையினர் 5000 பேர் வரையில் 15 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வெள்ளைமாளிகை அருகிலும் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடி சொத்துகளை எரியூட்டியும், கலகம் அடக்கும் காவல்துறையினர் மீது கற்களை வீசியும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
வெள்ளைமாளிகை அருகில் நடத்தப்பட்ட போராட்டத்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அமைந்துள்ள நிலத்தடி பதுங்குழி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.