திருட்டு மண் தான் குண்டு வெடிப்பிற்கு காரணமாம்?
யாழ்.வல்லிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம் பெற்ற சக்தி குறைந்த வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என்று அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வந்தவர் நேற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செயயப்பட்டு கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பிரதான சந்தேகநபர் மணல் கடத்தலில் ஈடுபடுபவர் எனவும், சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸார் மீது மிளகாய்த்தூள் தாக்குதல் நடத்தியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடத்தினர். மேற்படி சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. இதனையடுத்து அவரைத் தீவிரமாகத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் அவரைக் கைது செய்துள்ளனர். அவரது அலைபேசி அசைவுகளை வைத்தே கைது செய்ததாகக் கூறப்படு கின்றது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளின் பின்னர் நேற்று இரவு 10 மணியளவில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர். இதேவேளை துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மற்று மொருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டு பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.