Dezember 3, 2024

சுவிஸ் இன்றைய ஊடகமாநாட்டில் வெளியிடப்பட்ட தகவல்கள்,

“மார்ச் நடுப்பகுதியில் சுவிஸில் நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்த புதிய கொறோனா வைரஸ் தொற்றுகள் இன்று நாளுக்கு நாள் பத்து தொடக்கம் பதினைந்து என குறைந்து வந்துள்ளது. சுவிஸ் மீண்டும் மலர்கின்றது. ஊரடங்கிற்கு பதிலாக வழமைக்கு திரும்புவதைப் பற்றி இன்று பேசப்போவது மகிழ்ச்சியை தருகின்றது. கிட்டத்தட்ட பத்து கிழமைகளுக்கு முன் நாங்கள் இருந்த நிலையை விட இன்று ஒரு வித்தியாசமான – நல்ல நிலையில் உள்ளோம். தற்பொழுது குறைவான தொற்றுகளே உள்ளன. கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் வெளியில் நடமாடுகின்றனர். சிலவேளை மறுபடியும் தொற்று அதிகரித்தால் எங்களுடைய மருத்துவமனைகள் நன்றாக தயாராக இருப்பதும் எமக்கு தெரியும். முக்கியமாக எங்களுக்கு எந்த வகையில் சுகாதாரத்தையும், இடைவெளியையும் கடைப்பிடித்து இந்த வைரஸை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரியும். இதனால் சனிக்கிழமை, யூன் 6 தொடக்கம் மேலதிகமாக வழமைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.” என சுவிஸ் கூட்டாட்சியின் அரசுத்தலைவர் சிமொனெத்தா சமறூகா கூறினார்.

“ஒவ்வொரு நிறுவனங்களும், ஒவ்வொரு தனி நபரும் தொடர்ந்தும் சுகாதாரத்தை பேணும் வகையில் நடந்து கொள்வதை பொறுப்பில் எடுக்க வேண்டும். கை கழுவுதல், இடைவெளி பேணுதல், தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு முகமூடியை அணிதல் என்பது ஒவ்வொருவரும் தங்களின் முயற்சியால் செய்யக்கூடியதாகும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் முயற்சியை கொண்டு மக்களின் மற்றும் தங்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எங்கெல்லாம் இடைவெளியை பேண முடியாமல் இருக்கின்றதோ, அங்கெல்லாம் பெயர்- படிவங்களில் பெயர்களை பதிவிட வேண்டும். சிலவேளை மீண்டும் தொற்று ஏற்பட்டால் இது பயன்படும் என்பதே காரணமாகும். தற்போதைய நிலைமையின் படி முதியோர்களும் மேலதிகமாக வெளியே செல்லலாம். “ என்று கூறி கீழ்க்காணும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை பற்றி சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே விபரங்களை வெளியிட்டார்.

மே 30 தொடக்கம் இதுவரை கூறியது போன்று 5 பேர் அல்லாது 30 பேர் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது. யூன் முதலாம் திகதி தொடக்கம் பொது இடங்களில் கையெழுத்துகள் வேண்டப்படலாம்.

அது போன்று யூன் 6 தொடக்கம் முன்னூறு பேர் வரையான தனிப்பட்ட மற்றும் பொது விழாக்கள் நடாத்தப்பட முடியும். குடும்ப விழாக்கள், பூசைகள், நிகழ்ச்சிகள், நாடகங்கள், அரசியல் ஒன்று கூடல்கள் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப் படுகின்றது. யூன் 24 தொடக்கம் அடுத்த நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தொடர்ந்தும் ஓகஸ்ட் 31 வரை தடை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளிற்கும் ஏனைய நிகழ்ச்சிகளிற்கு போன்ற விதிமுறைகளே குறிப்பிடப்படும். மிகவும் அருகிலான உடற்தொடுகை இருக்கும் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜோடி நடனம் போன்றவை யூலை 6 வரை தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் யூன் 6 தொடக்கம் பெரியளவிலான குழுக்களில் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

பிள்ளைகளிற்கும், இளைஞர்களிற்கும் ஆகக்கூடியது 300 பேர் கலந்து கொள்ளும் வகையில் விடுமுறை முகாம்களிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இதற்காக கிராம சபைகளால் நாள் அட்டவணைகளுடன் விடுமுறைகளை மாணவர்கள் கழிக்கும் வகையில் தயார்வேலைகள் நடக்கின்றன. யூன் 6 தொடக்கம் இவற்றை பார்வையிட்டு பதிவு செய்யலாம்.

பொழுதுபோக்கிற்கு அமைவாக கூடாரமடித்து பயணிப்பது, மலைப்பிரதேசத்திற்கு தொங்கு வண்டிகள் போன்றவற்றில் செல்வது, மலை ஏறுவது, திரையரங்குகள், மிருகக்காட்சிச்சாலைகள், தாவரவியல் பூங்காக்கள், கசினோ, பொழுது போக்கு நிலையங்கள், நீர் தடாகங்கள் போன்றவற்றிற்கு யூன் 6 தொடக்கம் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

யூன் 6 தொடக்கம் உணவகங்களில் நான்கு பேரிற்கு மேல் சந்திக்கலாம். உணவகங்களில் நான்கு பேரிற்கு மேல் ஒன்றுகூடினால், வாடிக்கையாளர்களின் பெயர்களை நிறுவனங்கள், உணவகங்கள் வேண்டிக்கொள்வது அவசியமாகும். அனைத்து நிறுவனங்களும் நள்ளிரவிற்குள் மூடப்படுவது அவசியமாகும். இது டிஸ்கோ, இரவு களியாட்ட விடுதி போன்றவற்றிற்கும் பொருந்தும். ஒவ்வொரு நாளும் முன்னூறிற்கும் குறைவானோரே உள்நுளைய முடியும்.

யூன் 6 தொடக்கம் தொழிற்பாடசாலைகள், உயர்பள்ளிகள் , மேற்பள்ளிகள் போன்றவற்றில் பாடங்கள் நடாத்தப்படலாம். எப்படி பாடங்கள் நடைபெறப்போகின்றது என்பது பற்றி ஒவ்வொரு மாநிலங்களும், உரிய கல்வி நிலையங்களும் சூழ்நிலைகளிற்கு ஏற்ப முடிவெடுக்கலாம். தொடர்ந்தும் நேரலை வகுப்புக்கள் நடத்தப்படலாம். நேரலை வகுப்புக்களை தெடர்ந்து நடாத்துவதையே சுவிஸ் அரசு நல்லது என எண்ணுகின்றது.

மேலும் பாதிக்கப்படக்கூடியவர்கள் வீட்டில் இருப்பதையே வேலை வழங்குபவர்கள் மேற்கொள்ள வேண்டும். வேலையாளர்களை பாதுகாக்கும் வண்ணம் வேலையிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

“நிலைமை நன்றாக மாறினால் யூலை 6 தொடக்கம் சென்கென் இடங்களிற்கு பயணிக்கலாம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட்து போன்று யூன் 15 தொடக்கம் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும். எனினும் இத்தாலி எல்லை தொடர்பாக சுவிஸ் கூட்டாட்சி முடிவை இன்னும் எடுக்கவில்லை என்பது குறிபிடத்தக்கதாகும்.” என இறுதியாக சுவிஸ் அரசின் சட்ட மற்றும் காவல்துறை பணிமனையின் தலைவர் கறீன் சுத்தெர் அறிவித்தார்.