விமானம் பறக்கும்போது கொரோனா பரவாது!
விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவும் அபாயமில்லையென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கமளித்துள்ளது.
விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கும், விமான பயணங்களின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல நாடுகள் லொக் டவுன் அறிவித்துள்ளன. நாடுளிற்கிடையிலான விமான, கப்பல் போக்குவரத்தும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் இப்பொழுது படிப்படியாக மீள தொடங்கினாலும், போன்ற பல நாடுகளில் இன்னும் விமான போக்குவரத்து தொடங்கவில்லை.
சில நாடுகளில் அத்யாவசிய பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் விமானங்களில் பறக்கிறபோது பரவுமா என்ற கேள்வி எழுகிறது.
விமானங்களில் பறக்கிறபோது பெரும்பாலும் வைரஸ்களும், பிற கிருமிகளும் எளிதில் பரவுவதில்லை.
இந்த பதிலைத் தருவது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) ஆகும். அதே நேரத்தில் விமானங்களில் பயணிக்கிறவர்கள் இறங்கிய உடனேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மையம் பரிந்துரை செய்துள்ளது.
இதையொட்டி அந்த மையம் கூறும் முக்கிய தகவல்கள் வருமாறு:-
* கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், விமானத்தில் பறக்கிறவர்கள் ஆபத்து இல்லாதவர்கள் என்று கூற முடியாது. எனவே முடிந்தவரை விமான பயணங்களை தவிர்க்க வேண்டும். விமான பயணத்தின்போது, விமான நிலையங்களில் கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. இது பயணிகளை மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புக்கு வழிநடத்துகிறது. மற்றவர்கள் தொட்ட மேற்பரப்புகளையும் தொட வேண்டியது வரும்.
* மக்கள் நெரிசல் மிகுந்த விமானங்களில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது மிகவும் கடினம். 6 அடி தொலைவுக்குள் உட்கார வேண்டியது வரலாம். மணிக்கணக்கில் உட்காரும் நிலை இருக்கும். இது கொரோனா வைரஸ் பரவுவதற்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கும்.
* அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கிறவர்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஆரோக்கியம், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* எந்த ஒரு பயணியும் காய்ச்சல், தொடர் இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளில் தவிக்கிறபோது விமான சிப்பந்திகள் அந்த பயணி குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திடம் (சிடிசி) தகவல் தெரிவித்து விட வேண்டும்.
* விமான நிறுவனங்கள், சிப்பந்திகள் தொற்றுநோய் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும், நோய்வாய்ப்பட்ட பயணிகளை கவனித்துக்கொள்ளவும், அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்யவும், விமான புறப்பாடுக்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மிக முக்கியமான ஆலோசனை, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 வினாடிகள் கை கழுவ வேண்டும். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்த பின்னர் அல்லது அசுத்தமான உடல் திரவங்கள் அல்லது மேற்பரப்புகளை தொட்ட பின்னர் சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாவிட்டால், அல்கஹோல் சேர்ந்த சுத்திகரிப்பு திரவம் (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* விமான நிறுவனங்கள், கபினுக்கும் (விமானி அறை), பிற சிப்பந்திகளுக்கும் அவர்களது தனிப்பட்ட உபயோகத்துக்கு சானிடைசர் திரவம் வழங்க வேண்டும்.
இப்படி வழிமுறைகளை கூறுகிற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், விமானத்தில் நடு இருக்கையை காலியாக வைத்திருக்க வேண்டும். இதனால் 2 பயணிகள் இடையே 6 அடி தூர இடைவெளியை பராமரிக்க முடியும் என்று கூற வில்லை. ஆனால், பயணிகள், கபின் குழுவினர், நோய்வாய்ப்பட்ட நபர் இடையே தொடர்பை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
முடியுமானால் மற்றவர்களிடம் இருந்து நோய்வாய்ப்பட்ட நபரை 2 மீட்டர் தொலைவுக்கு பிரித்து வைத்து அவருக்கு சேவை செய்ய ஒரு குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நோய்வாய்ப்பட்ட நபர் பொறுத்துக்கொள்வாரேயானால் ஒரு முக கவசமும் வழங்க வேண்டும்.
முக கவசம் இல்லை என்றாலோ நோய் வாய்ப்பட்ட நபர் அணிய சிரமப்பட்டாலோ, அவர் இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை ‘திசு காகிதம்’ கொண்டு மூடிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
எந்த அறிகுறியும் இல்லாத பயணிகள் அடையாளம் காணப்படவில்லை என்றால், விமானங்களை சுத்தம் செய்தல், திடக்கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுய பாதுகாப்பு கவசங்களை அணிதல் போன்ற வழக்கமான இயக்க முறைகளை விமான நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். அறிகுறிகளுடன் கூடிய பயணிகளை கண்டறிந்தால், உடனடியாக விமானம் வழக்கமான துப்புரவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் மேம்பட்ட துப்புரவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இருக்கை, இருக்கை பெல்ட்டு, அந்த பயணியின் 6 அடி தொலைவில் எல்லா பக்கமும் சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.