November 21, 2024

தொண்டமான் இடத்திற்கு மகன்?

உயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு காரணமாக, வெற்றிடமான வேட்பாளருக்காக அவரது புதல்வர் ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், இ.தொ.கா கோரியுள்ளது.
மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டம் சார்பில் அவரது மகன் ஜீவன் தொண்டமான் போட்டியிடுவார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தூதுகுழு பிரதமருக்கு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் ஒருவர் திடீரென மரணமடைந்தால் அவரின் இடத்திற்கு மூன்று நாட்களுக்குள் ஒருவரை நியமிக்க வேண்டும்.
இதன்படி இன்று (27) கூடிய இதொகா தலைமை தொண்டமானின் இடத்துக்கு ஜீவனை நியமிக்க முடிவெடுத்தது.
இதனை தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இதொகா தூதுக்குழு கட்சியின் இந்த முடிவை தெரிவித்தது.
பொதுஜன பெரமுனவின் கீழ் இதொகா போட்டியிடுவதால் முறைப்படி பெரமுனவின் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து பின்னர் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.