அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டம்..!!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று (26) பத்தரமுல்லையிலுள்ள தனது வீட்டிலிருந்தபோது, தவறி விழுந்ததை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. அவர் மாரடைப்பினால் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று இரவே கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை 4.30 மணிக்கு அவரது உடல் இராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாளை (28) நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும். பின்னர் கட்சி தலைமையகமான சௌமியமூர்த்தி பவனிற்கு கொண்டு செல்லப்படும்.
நாளை மறுநாள் இறம்பொடையிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
மறுநாள் 30ஆம் திகதி மீண்டும் கொட்டகலைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இறுதிச்சடங்கு இடம்பெறும்.
முன்னர் 30ஆம் திகதி இறுதிச்சடங்கு நடைபெறுமென கட்சி வட்டாரங்கள் தெரிவித்தபோதும், தற்போது 31ஆம் திகதியென இறுதி செய்யப்பட்டுள்ளது.