`தீபா, தீபக் 2-ம் நிலை வாரிசுகள்; நினைவு இல்ல யோசனை!’-ஜெயலலிதா சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
வேதா இல்லம்
„ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து அறிவித்தது.”
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பை நிர்வாகிக்க, தனி நிர்வாகியைப் போடவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி, கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசுகளாக எங்களை அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் வழங்க வேண்டும் என்றும் கூறி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி தொடர்பாக ரூபாய் 40 கோடி சொத்துகளை முடக்கி வைத்திருப்பதாகக் கூறி, வருமான வரித்துறையும் இந்த வழக்கில் இணைந்தது. இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து வழக்கிற்கான தீர்ப்பை அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில், இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கெனவே நிறைவடைந்தன. அதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கிற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தனர். இதனிடையே தமிழக அரசு, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக அறிவித்து கடந்த மே 22-ம் தேதி அவசர சட்டத்தைப் பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் சொத்து வழக்கிற்கான தீர்ப்பை அறிவித்துள்ளது.
Also Read
`வேதா இல்லம் 2007-ம் ஆண்டே முடக்கப்பட்டு விட்டது’ – உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்
„ஜெயலலிதாவின் இல்லம் முழுவதையும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். போயஸ் தோட்டத்தில் உள்ள அவரின் இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம். வேதா நிலைய இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம்” என பரிந்துரைகளை வழங்கியது. மேலும், „ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, அவரது அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் உரிமை உள்ளது. இருவருமே இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள். அவரின் சொத்துகளில் ஒரு பகுதியைக்கொண்டு அறக்கட்டளையைத் தொடங்கலாம். இவை தொடர்பாக, தமிழக அரசு எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து அறிவித்தது.