November 22, 2024

சீன ஆய்வு கூடத்தில் உயிருடன் உள்ள மூன்று கொரோனா வைரஸ்கள்..!!

சீன ஆய்வு கூடத்தில் உயிருடன் உள்ள மூன்று கொரோனா வைரஸ்கள்..!!

சீனா – வுஹான் நகரில் இருக்கும் சீன நச்சுயிரியல் நிறுவன ஆய்வு கூடத்தில் உயிருள்ள மூன்று கொரோனா வைரஸ்கள் இருந்ததாகவும், எனினும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கொரோனா வைரஸூடன் அவை பொருந்தவில்லை என்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் வுஹான் நகரில் இருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்தே வெளியாகி இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சிலர் கூறி வருகின்றனர்.

எனினும் இது இட்டுக்கட்டப்பட்ட கூற்று என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் வான் யன்யி குறிப்பிட்டுள்ளார்.

சீன தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

“வெளவாலில் இருந்து பெறப்பட்ட சில கொரோனா வைரஸ்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார். எனினும் இவை சார்ஸ்-கொவ்-2 வைரஸை ஒத்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறியப்படாத வைரஸ் பற்றி கடந்த டிசம்பர் 30 ஆம் திகதியே மாதிரிகள் கிடைத்ததாகவும் ஜனவரி 2 ஆம் திகதி அதன் மரபணு வரிசையை கண்டறிந்து ஜனவரி 11 ஆம் திகதி உலக சுகாதார அமைப்புக்கு அது தொடர்பான விபரத்தை வெளியிட்டதாகவும் அந்த ஆய்வுகூடம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதிரி கிடைக்கப்பெறும் வரை அந்த வகையான வைரஸை சந்தித்திருக்கவில்லை என்று வான் யன்யி குறிப்பிட்டுள்ளார்.

“ஒருபோதும் நாம் வைரஸை வைத்திருக்கவோ, ஆய்வு செய்யவோ அல்லது சந்திக்கவோ இல்லை.

இதற்கு முன்னர் இது பற்றி எமக்கு எந்த அறிவும் இருக்கவில்லை. உண்மையில் அனைவரையும் போல் இந்த வைரஸ் இருப்பது எமக்கு தெரிந்திருக்கவில்லை.

அது இல்லாதபோது ஆய்வுகூடத்தில் இருந்து எவ்வாறு வெளியாக முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.