கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்
வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த ஒரு முக்கிய ராணுவ கூட்டத்திலேயே வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டு, வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த கூட்டத்தில் வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, நாட்டின் ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிறநாட்டிலிருந்து வரும் அச்சுறுதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரிய ராணுவத்தின் தலைவர் கிம் ஜாங் உன், துணை தலைவர் பாக் ஜாங் சோன், ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தன் நாட்டின் அணுசக்தி திறனை மேம்படுத்த கிம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்கா கடற்படை அதிநவீன லேசர் ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.