பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு பிரான்சும் பதிலடி!
பிரித்தானியாவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரதீப் பட்டேல்
நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு பிரான்ஸ் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், தாங்களும் பதிலுக்கு தனிமைப்படுத்தலை செய்யத் தயாராக உள்ளது என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரான்சில் பார்வையாளர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து தனிமைப்படுத்த அழைக்கப்படுவார்கள்.
கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாவது அலையைத் தடுப்பதற்கு பிரித்தானியா யூன் 8 முதல் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறினார்.
வானூர்தி நிறுவனங்கள் தங்களின் தொழில் துறையை இந்த முடிவு அழிக்கும் என எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு திரும்பி வரும் பிரித்தானிய மக்கள் உட்பட அனைத்து சர்வதேச வருகையாளர்களும் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும் அவர்கள் எங்கு தங்கியிருப்பார்கள் என்ற விபரங்களையும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
பிரித்தானியாவில் தனிமைப் படுத்தல் முடிவை மீறுபவர்களுக்கு 1,000 பவுண்டுகள் தண்டனைப் பணம் அந்த இடத்திலேயே அறவிடப்படும் என கூறியுள்ளார் பட்டேல்.
தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஐரிஷ் குடியரசிலிருந்து வருபவர்களுக்கு பொருந்தாது, மேலும் பொருட்களை எடுத்து வரும்பாரவூர்தி ஓட்டுநர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பருவகால விவசாயத் தொழிலாளர்களுக்கும் விலக்கு உண்டு.