தமிழரசிற்கு தனிப்பேச்சாளர் – சீ.வீ.கே.சிவஞானம்
கேள்வி- இன்றைய நிலைமையில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
ஆயுதப் பேராட்டத்துடன் உடன்படவில்லை. தான் அகிம்சையில் நாட்டம் கொண்டவன் என விளங்கப்படுத்த போய்த் தான் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். ஆயுதப் போராட்டம் அரசியல் என இரண்டையும் பேசியிருந்தால் சிக்கல் வந்திருக்காது.
என்னைப் பொறுத்தவரையில் நான் புலிகளோடு இணைந்து செயற்பட்டவன் அவர்களை ஆதரித்தவன். புலிகள் அரசியல் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் சமாந்தரமாக முன்னெடுத்தனர். ஆகவே இந்த விடயங்களை நாங்கள் தெளிவாக சொல்ல முடியும்.
கேள்வி- சுமந்திரனின் இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு கூட்டமைப்பிற்குள் இருந்தே எதிர்ப்புகள் வருகின்ற அதேவேளையில் அவரை பேச்சாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டுமென்று கோரப்படுகின்றதை கட்சியின் முக்கியஸ்தரான நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்- – பேட்டியில் சில விடயங்களுக்கு சுமந்திரன் பதில் சொல்லப் போக பலவிதமான விமர்சனம் வந்தது உண்மை தான். அத்தகைய பதில்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்பது எனது முதலாவது கருத்து. இரண்டாவதாக வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தை உள்ளடக்காமல் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு அவரை கட்சிக்குள்ளும் வெளியிலும் தற்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதற்காக அவரை நீக்க வேண்டுமென்ற கருத்தோடு நான் உடன்படவில்லை. அப்படியான செயற்பாடுகள் முன்பும் கூட்டமைப்பிற்குள் நடக்கவில்லை. சுமந்திரன் தனியாக இந்த விடயங்களில் ஒரு முடிவை எடுக்கலாம். கட்சியாக நீக்குவது பொருத்தமானதாகப் படவில்லை.
ஆனால் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு ஆயுத அரசியல் போராட்டத்தோடு உடன்படவில்லை என்று சொன்னது தவறானது. அவ்வாறான கருத்தை அவர் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து
கேள்வி- சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றும் கூட்டமைப்பு தவறான பாதையில் பயணிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
பதில்- சுமந்திரனின் நிலைப்பாடு இந்தவிடயத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. பேட்டி எடுத்தவர் இனவாதிபோன்று குறுக்கு விசாரணை போன்றே அவர் செயற்பட்டிருக்கின்றார். ஆனாலும் அந்தப் பேட்டியில் சுமந்திரன் கூறியவை அவரது தனிப்பட்ட கருத்து தான். அவர் பேச்சாளராக இருந்த கொண்டு அப்படி சொல்லக் கூடாது. ஆனால் அவரின் கருத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கூட்டமைப்பை குற்றம் சொல்ல முடியாது.
கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சி. வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் என இராஐதந்திர வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். எனவே கூட்டமைப்பை யாரும் தவறாக சித்தரிக்க முடியாது. சித்தரித்தால் அது தவறானது.
கேள்வி- சுமந்திரன் மீதான விமர்சனங்களுக்கு கூட்டமைப்பின் உட்பூசல் தான் காரணமா?
பதில்- – சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது மறுக்கக் கூடியது அல்ல. அதற்கு மேல் நாங்கள் விவாதிக்கத் தேவையில்லை. மக்கள் தான் நீதிபதி. அவர்களே தீர்ப்பை கொடுப்பார்கள். தற்போது தேர்தல் வருகிறது தானே. ஆகையினால் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தேர்தலிலே மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.
மேலும் கூட்டமைப்புக்குள் உட்பூசல் இல்லை. ஆனால் அந்தக் கருத்துடன் உடன்பட முடியாதவர்கள் அதனை எதிர்க்கின்றனர். ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை பெரிய அளவில் தாக்கம் செலுத்தாது. இப்போது இந்த விடயத்திலும் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். அது பொது வெளியில் பேசப்பட்டதும் உண்மை தான். தொடர்ந்து கட்சிக்குள்ளேயும் பேசப்படும். அவ்வாறு விவாதிக்கப்பட்டு இணக்கப்பாடு ஏற்படுமென்று நான் நம்புகின்றேன்.
கேள்வி- இத்தகைய நிலைமைகளின் பின்னராக கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்படுத்த சாத்தியம் உள்ளதா?
பதில்- – தமிழரசுக் கட்சியிலோ கூட்டமைப்பிலோ மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சில சில பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அது குறித்து பேசப்படும். அதன் பின்னர் ஒரு முடிவெடுத்து ஒருமித்துச் செயற்படுகின்ற நிலைமை தான் கட்சிக்குள் இருக்கிறது.
தற்போது பேச்சாளராக உள்ள சுமந்தரனை அதில் நீக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் அது குறித்து எல்லாம் கட்சி தான் முடிவெடுக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ஒட்டுமொத்த நிலையை மாற்றி பாராளுமன்றக் குழுவின் பேச்சாளர் என்ற ஒருவரையும் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பேச்சாளரையும் வைத்திருக்க வேண்டும் என்பது தான் ஆரோக்கியமாக இருக்கும். அதுதான் இனிமேல் இப்படியான இடர்ப்பாடுகளை தவிர்ப்பதற்கான வழிவகைகளாக இருக்குமென்று நான் பார்க்கிறேன்.