கனேடிய மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை..!!
நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்களுக்குக் கோவிட்-19 தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகத்தினரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள். பூர்வகுடியினருக்கு, குறிப்பாக அவர்களது குடும்பங்களில் இருந்தும் சமூகங்களில் இருந்தும் பிரிந்திருப்போருக்கு, தனித்துவமான தேவைகள் இருப்பதைக் கனேடிய அரசு புரிந்துகொள்கிறது.
பூர்வகுடிச் சமூகங்களின் உடனடித் தேவைகளை நிறைவு செய்வதற்கும், கோவிட்-19 இன் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கும் புதிதாகத் தகுதி அடிப்படையிலான 305 மில்லியன் டொலர் பூர்வகுடி சமூக உதவி நிதியம் ஒன்றை அமைப்பதாகக் கனேடிய அரசு மார்ச் 18 ஆந் திகதி அறிவித்தது. நகர்ப்புறங்களிலும், பூர்வகுடிக் குடியிருப்புக்களுக்கு வெளியேயும் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்குச் சேவையாற்றும் பூர்வகுடி அமைப்புக்களுக்கென இந்தப் பணத்தில் 15 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டது.
நகர்ப்புறங்களிலும், பூர்வகுடிக் குடியிருப்புக்களுக்கு வெளியேயும் வசிக்கும் பூர்வகுடி மக்களுக்குச் சேவையாற்றும் பூர்வகுடி அமைப்புக்களுக்கு மேலதிகமாக 75 மில்லியன் டொலர் வழங்கப்படுவதாகப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார்.
இந்த மேலதிக நிதி, உணவுப் பாதுகாப்பு, மனநல ஆதரவுச் சேவைகள், தூய்மைப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் போன்ற பூர்வகுடி மக்களின் இன்றியமையாத தேவைகளை நிறைவு செய்வதற்கு அதிக சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு உதவியளிக்கும். மூத்தோர், போக்குவரத்து, பூர்வகுடிச் சிறுவர்களுக்கும் இளையோருக்குமான கல்விக் கருவிகள் போன்ற ஏனைய தேவைகளுக்கும் இந்தப் பணம் உதவும். இந்தத் திட்டங்களுக்கான பணத்தை வழங்கும் செயற்பாடு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும்.