அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி..!!
அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் பின்னர் வலுவிழந்து புயலாக, நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் பங்களாதேஷின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிக்கும் மக்கள் சுமார் 6 இலட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
எனினும், அம்பன் புயலுக்கு 72 பேர் வரை பலியாகி உள்ளனர் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில், கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும், மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில் மற்றும் மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.