தமிழகத்தில் கொரோனா 13 ஆயிரத்தை தாண்டியது!!
தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு.இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது… மாநிலத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. அதில், 83 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள். கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 987 பேர் குணமடைந்து வீடுகளுக்க் திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்ட 743 பேரில் சென்னையில் மட்டும் 557 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,228 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 61 பேர் (இதில் 3 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்), திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 63 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று 11,894 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 803 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 11,381 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1007 பேரும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளில் திரும்பிய நிலையில் 2-வது கட்ட சோதனையில் 18 பேருக்கு கொரோனா இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.