November 21, 2024

இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும்!

இலங்கையில் இறுதிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டு அரசியல் பிரமுகரான ஹக் மெக்டெர்மொட் (Hugh McDermott) இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். முள்ளிவாயக்கால் நினைவு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“இன்று, மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 வது ஆண்டு நினைவு நாள்.

இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தை குறிவைத்து 160,000 அப்பாவிகள், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட இனப்படுகொலையின் ஒரு பகுதி.

பலர் கலாச்சாரம், நம்பிக்கை, மொழி மற்றும் மரபுகள் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வேண்டும். இந்த இனப்படுகொலையை நாம் நேரில் நினைவுகூர முடியாது.

எனினும், இந்த இனப்படுகொலை ஒருபோதும் மறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களின் சார்பில் குரல் கொடுத்து வரும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரசுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.” என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவரின் குறித்த கருத்திற்கு முகநூல் பக்கத்தில் சிங்கள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.