விடுதலைப் புலிகளின் இன்னுமொரு ஆளுமைதான் லெப்.கேணல் ராதா!
1980 களில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் படைபயில் குழுவிலும், இராணிச் சாரணராகவுமிருந்து பின்னர் கொழும்பிலே வங்கியொன்றில் கடமையாற்றிக்
கொண்டிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட ராதாண்ணை 1983 இனங்கலவரங்களின் பின்னர் தன்னை முழுமையாக விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டார்.
கொண்டிருந்த கனகசபாபதி ஹரிச்சந்திரா என்ற இயற்பெயரைக் கொண்ட ராதாண்ணை 1983 இனங்கலவரங்களின் பின்னர் தன்னை முழுமையாக விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டார்.
பொன்னம்மான் அவர்களின் படைத்துறைப் புடமிடலும் இந்துக் கல்லூரிப் படைபயில் குழு, சாரணர் குழுப் பயிற்சி என்பன ராதாண்ணையை இயக்கத்தின் சிறந்த போர்ப்பயிற்சி ஆசானாக்கியது. பல முன்னணித் தளபதிகளுட்பட பல நூற்றுக் கணக்கான போராளிகளுக்குப் பயிற்சியளித்துத் தாயகம் திரும்பிய ராதாண்ணை மன்னார் மாவட்டத் தளபதி விக்ரர் அவர்களின் வீரச்சாவின் பின்னர் மன்னார் மாவட்டத் தளபதியாகவும் கிட்டண்ணா தாக்குதலொன்றில் காலில் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து யாழ். மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
அக்காலத்தில் புலிகளிடமிருந்த வானெதிர்ப்பு இயந்திரத் துப்பாக்கிகளை இயக்குவதில் வல்லுனராகத் திகழ்ந்த ராதாண்ணையினை நினைவு கூர்ந்தே விடுதலைப் புலிகளின் வான் எதிர்ப்பு படையணிக்குத் தலைவர் அவர்கள் ராதா வான்காப்புப் படையணியெனப் பெயரிட்டார்.
அக்காலத்தில் முன்னணித் தளபதியாகவிருந்த ராதாண்ணை 14-01-1987 இல் தென்னாபிரிக்காவிலிருந்து கண்ணிவெடிகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியது எனத் தருவிக்கப்பட்ட „பவள்“ கவச வாகனத்தினைக் கண்ணிவெடி மூலமே தகர்த்து உலக இராணுவ வல்லுனர்களை அப்போதே அதிர வைத்தவர்.
யாழ் பிராந்தியத் தளபதியாக பொறுப்பேற்ற ராதாண்ணை குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி இராணுவமுகாம், மயிலியதனை இராணுவமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ இராணுவமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் படைத்துறைப் பல்கலைக்கழகமே அனைத்துப் போர்த் தளபதிகளுக்குமே ஒரு முன்னோடி வழிகாட்டி.
20-05-1987 இல் வளலாயில் இராணுவத்துடனான சண்டையில் உலங்கு வானூர்தி மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது அதன் எதிர்த் தாக்குதலிலேயே வீரச்சாவை அணைத்துக் கொண்டார். இயக்கத்தின் மூன்றாவது „லெப்டினன்ட் கேணல்“ நிலை ராதாண்ணைக்கே வழங்கப்பட்டுமிருந்தது.
இன்றைய நாளில் ராதாண்ணையும் நினைவு கூரப்பட வேண்டியவர்.