November 21, 2024

கிருஸ்ணர் போன்றதே தம்பியின் போராட்டம்:சிவி!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்
1. கேள்வி: பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: 1976ம் ஆண்டு மே மாதம் 14ந் திகதி அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கடைசிப் பந்தியைப் பார்த்தீர்களானால் அதில் கிட்டத்தட்ட பின் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது –
“இந்த மகாநாடானது தமிழ் தேசத்திடம் ஒரு பொதுவான வேண்டுதலை விடுக்கின்றது. முக்கியமாகத் தமிழ் இளைஞர்களிடம் எமது சுதந்தரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்றாக ஈடுபடுத்துமாறு வேண்டுவதுடன் இறைமையுடைய தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரையில் பின் வாங்காது போரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது”.
அன்றைய கால தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளில் “புனிதப் போர்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறித்த போர் அஹிம்சை வழியிலோ, சத்தியாக் கிரகம் மூலமோ, அரச தந்திரம் மூலமோ நடைபெற வேண்டும் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே தம்பி பிரபாகரன் அவர்கள் குறித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? நாம் அஹிம்சையில் நாட்டம் கொண்டவர்கள் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தைக் குறை கூறவோ, கொச்சைப்படுத்தவோ எமக்கு எந்த உரித்தும் இல்லை. தம்பி பிரபாகரன் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கோரியதைத் தான் முழுமூச்சுடனும் நம்பிக்கையுடனும் நடைமுறைப்படுத்தினார். அதைப் பிழையென்று இன்று நாம் கூற எமக்கு எந்த உரித்தும் இல்லை. மகாபாரதம் நிலத்திற்கான போர் பற்றிக் கூறுவது. பகவான் கிருஷ்ணரே ஆயுதப் போராட்டத்தை முன்னின்று நடத்தனார். அன்பு வழியை நாடும் நாங்கள் பகவான் கிருஷ்ணன் சென்ற தூதையும் கவனிக்க வேண்டும். ஊசி குத்தும் இடங் கூடத் தர முடியாது என்றதன் பிற்பாடு தான் போர் தொடங்கியது. ஆகவே தம்பி பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் அன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடத்தப்பட்ட போர் என்பதே எனது கருத்து.
2. கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இது குறித்து தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: மக்களிடையே அவர்களின் மதிப்பு குறைந்துவரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் இன்னமும் உயிரோடு இருப்பதாக மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக இவ்வாறான மலிவான தந்திரங்களை நாடுவது வழக்கம். எமக்கு அவை தேவையில்லை. எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதில் கூட்டமைப்பினர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பது உண்மையில்லை. 2015ம் ஆண்டில் பதவியில் இருந்த அரசாங்கத்துடன் அவர்கள் பேசியிருக்க வேண்டும். நாம் 15 பேர் இருக்கின்றோம். நாம் இப்போது உங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் பதிலுக்கு எமக்கு ஆதரவு நல்க வேண்டும். இம்முறை உங்கள் பாதீட்டுக்கு (டீரனபநவ) நாம் சார்பாகத் தான் வாக்களிப்பதாக உத்தேசம். ஆனால் அதற்கு முன்னர் எமது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும். முன்னர் துஏP யினருக்கு செய்ததைத் தான் நாங்கள் கோருகின்றோம். புதிதாக எதுவும் கோரவில்லை. இதனை நீங்கள் செய்யாவிட்டால் பதீட்டிக்கு சார்பாக நாம் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்றிருக்கலாம். பாதீட்டில் அது பலிக்காது இருந்திருந்தால் அரசாங்கம் எப்போது எமது 15 உறுப்பினர் வாக்கு அவசியம் என்று கருதியிருந்தார்களோ அப்போது இதைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறு தமிழ் மக்களிற்கான பல  விடயங்கள் சம்பந்தமாக அவர்கள் அப்போதைய அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தற்போதைய பிரதம மந்திரியுடன் பேசுவது என்பது வெறும் வெற்று நடவடிக்கை. இரணிலுடன் முன்னர் கை கோர்த்தது போல் அடுத்த தேர்தலில் பிரதம மந்திரி மகிந்தவுடன் கைகோர்க்கப் போவதாக தமிழ் மக்களுக்கு அறிவிக்கவே இந்த நாடகம். இவ்வாறான பல நாடகங்;களை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைமைத்துவம் இதுவரையில் நடாத்தி வந்துள்ளது. பயன் எதுவும் கிட்டவில்லை. இனியும் கிட்டாது. ஒரு வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பழைய ஆதரவாளர்கள் சிலரை கனவுலகில் சஞ்சரிக்க வைக்க இது உதவலாம்.