November 21, 2024

முன்னணிக்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லப்பிட்டி
புனித பிலிப்னேரியர் தேவாலையத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட பொது மக்களின் நினைவாகவும், காணாமல் ஆக்கப்பட்ட ஜிம்பிராவுன் பாதிரியாரின் நினைவாகவும் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இராணுவம், பொலிஸார் குறித்த அஞ்சலி நிகழ்வினை நடத்துவதை தடுப்பதற்கு சில முயட்சிகள் மேற்கொண்டிருந்த போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

கொரோனா இடர் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகளை நடத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை தனிமைப்படுத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இருப்பினும் இன்று மீளாய்வு மனுவினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது மேற்படி உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை அல்லப்பிட்டி படுகொலையை நினைவு கூறும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மேற்படி அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன், சட்டத்தரணிகளான க.சுகாஸ், ந.காண்டீபன், திருக்குமரன், சோபிதன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், வை.கிருபாகரன், தனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு முதலில் பொலிஸார் வருகைதந்தனர். பின்னர் அங்கு இராணுவத்தினரையும் பொலிஸார் அழைத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு குவிந்த இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், நிகழ்வினை நடத்தியவர்களை வீடியோ எடுத்திருந்தனர்.

இதன்படி படைத்தரப்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாதவாறு, சமூக இடைவெளியை பேணி குறித்த அஞ்சலி நிழக்வு நடத்தி முடிக்கப்பட்டது.