கொவிட்-19 கிருமித்தொற்றின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது..!!
சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் இலங்கைய ஒருங்கிணைக்கப்படுவதன் மற்றொரு அறிகுறியாக, கிரீன் பெரெட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரிகள், கடந்த மார்ச் மாதம் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படை விசேட அணிக்கு விரிவான பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
ராஜபக்ஷ அரசாங்கம் கொரோனா வைரசைத் தடுப்பதற்காக நாட்டை பூட்டியதோடு மார்ச் 19 அன்று திடீரென அது இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் மூடியதால் ஆயிரக்கணக்கான பிரஜைகள் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. இத்தகைய நிலைமையின் மத்தியிலும் மூலோபாய கிழக்கு-கடற்கரை துறைமுகத்தில் இந்த போர் சார்ந்த பயிற்சி மாதம் முழுவதும் நடந்துள்ளது.
அமெரிக்க இராணுவ சிப்பாய்கள், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகத்துடன் இணைக்கப்பட்டுள்ள விசேட படையினர் இயக்க விநியோக மையமான அல்பா 1333 இன் உறுப்பினர்களாவர். அவர்கள் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மற்றும் 4வது துரித தாக்குதல் புளொட்டிலாவின் 35 உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பின்வருவன அடங்கும்: சிறிய பிரிவு தந்திரோபாயங்கள், நகர்ப்புற சூழலில் இராணுவ நடவடிக்கைகள், தந்திரோபாய போர் விபத்து பராமரிப்பு, கொம்பட் மார்க்ஸ்மேன்ஷிப், குளோஸ் குவட்டர் பெட்டில், தாக்குதல் திட்டமிடல், கடல்சார் செயல்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் ஆயுத மோதல் சட்டம்.
இந்த பிரிவுகள் பொதுமக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கும், அண்மையில் பயங்கரவாத எதிர்ப்பு தேடுதல் நடவடிக்கைகள் எனப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. 2016 டிசம்பரில், அப்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுனாரத்ன தலைமையிலான கடற்படை சிப்பாய்கள், ஹம்பாந்தோட்ட துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை நசுக்க பயன்படுத்தப்பட்டனர்.
அவப்பேறுபெற்ற கிரீன் பெரெட்ஸ், வியட்நாம் முதல் ஆப்கானிஸ்தான் வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்காக அர்ப்பணித்துக்கொண்ட ஏழு தசாப்த கால சாதனையைக் கொண்டது. சி.ஐ.ஏ.வுடன் நெருக்கமாக ஒத்துழைத்த அது, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க சார்பு சர்வாதிகாரங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்காக கொலைக் குழுக்களுக்கு பயிற்சி அளித்துள்ளதுடன், போர் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை தீர்மானங்களை மீறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
இதற்கு சமமாக இலங்கை கடற்படையும் அதன் குற்றங்களுக்கு பேர்போனதாகும். இதில் 1985இல் 35 தமிழ் பொதுமக்கள் ஒரு பொது படகில் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளும் அடங்கும்.
2008 இல் கொழும்பில் இருந்து 11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று „காணாமல் ஆக்கியமை“ தொடர்பான குற்றச்சாட்டுகளை போர்க்கால கடற்படைத் தளபதி வசந்த கரனகொட மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளும் தற்போது எதிர்கொள்கின்றனர். வடக்கில் மன்னார் நகரத்தில் யுத்த கால கடற்படைச் சோதனைச் சாவடிக்கு அருகில் 136 சடலங்களின் பாரிய புதைகுழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சடலங்கள் இலங்கை இராணுவப் படைகளால் கொல்லப்பட்டவர்களுடையது என தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க சிறப்புப் படைகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையிலான பயிற்சி உறவுகள் புதியவை அன்றி, அவை புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத போரின்போது தொடங்கப்பட்டதுடன் கிரீன் பெரெட்ஸ் உடைய “பெலன்ஸ் ஸ்டைல்” நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டன. 2009 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளிலும் பயிற்சிகள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்க இராணுவப் படைகளின் மிகப்பெரிய செறிவாக இருக்கும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகம் (USINDOPACOM), இந்து சமுத்திரப் பிராந்திய நடவடிக்கைகளில் இலங்கை இராணுவப் படைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. சீனாவின் தீர்க்கமான கடற்படை வர்த்தக பாதைகளுக்கு வடக்கே இலங்கையின் மூலோபாய இருப்பிடமானது சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளுக்கு இன்றியமையாததாக ஆக்குகிறது.
2019 பெப்ரவரியில் அமெரிக்க செனட் ஆயுத சேவைகள் குழுவிடம் சாட்சியமளித்த யு.எஸ்.இண்டோபகொம் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன், „இலங்கை படைகளுடன் இராணுவ கூட்டுழைப்பையும் ஒத்துழைப்பையும் தொடர்
வேண்டியது எங்கள் நலன்களில் உள்ள விடயமாகும்,“ என அறிவித்தார். இந்த தீவு தேசமானது „இந்திய சமுத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளது“ என்று அவர் மேலும் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரிப் போரின் இறுதி ஆண்டுகளில் அமெரிக்கா கொழும்புக்கு தளபாட மற்றும் மூலோபாய ஆதரவை வழங்கியது. 2007 இல், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு இலங்கை துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு பிரவேசிக்க அனுமதிப்பதற்கான உள்நுழைவு மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தத்தில் (ACSA) கையெழுத்திட்டார்.
2009 மே மாதம் போர் முடிவடைந்த பின்னர், இந்த இணைப்புகள் சீராக வளர்ந்தாலும், சீனாவுடனான ராஜபக்ஷவின் பொருளாதார உறவுகள் குறித்து அமெரிக்கா அதிக அக்கறை காட்டியது. 2015 இல், வாஷிங்டன் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொண்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில், மைத்ரிபால சிறிசேனனை ஜனாதிபதியாக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டதுடன், அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
அதன்பிறகு, இலங்கை துறைமுகங்களுக்கு அடிக்கடி அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் வருகை மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சிகள் உள்ளடங்களாக அமெரிக்க-இலங்கை இராணுவ உறவுகள் துரிதமாக விரிவடைந்துள்ளன.
2019 முற்பகுதியில், அமெரிக்காவின் 7வது கடற்படை விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜோன் சி. ஸ்டென்னிஸ், திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்து, இலங்கையில் ஒரு அமெரிக்க கடற்படை தளவாட மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது.
2017 இல், கொழும்பானது உள்நுழைவு மற்றும் குறுக்குச் சேவை உடன்படிக்கையை புதுப்பித்ததுடன், இலங்கை மண்ணில் அமெரிக்கப் படைகளுக்கு மிகவும் பரந்தளவில் உள்நுழைவதற்கும் இயங்குதவற்கும் வசதியளிக்கும் வகையில் அமெரிக்காவுடன் தற்போதுள்ள படைகள் நிலைகொள்ளல் உடன்படிக்கையை (SOFA) புதுப்பிக்கும் திட்டங்களையும் தொடங்கியது.
நவம்பரில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, இலங்கையை வாஷிங்டனின் நீண்டகால இராணுவ-மூலோபாய திட்டங்களில் மேலும் ஒருங்கிணைத்து வருகிறார் என்பதையே கடந்த மாத உயர் மட்ட பயிற்சி சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு அனுப்பிய ஒரு வாழ்த்துச் செய்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, “அனைத்து நாடுகளும் சுபீட்சமடையவும், நல்லாட்சியை ஆழப்படுத்தவும், நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் கூடிய சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை” ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஒத்துழைப்பதாக கபடத்தனமாக பிரகடனம் செய்தார்.
ஜனவரி மாதம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், தீவு தேசத்துடனான „பங்கான்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும்“ வெள்ளை மாளிகை உறுதிபூண்டுள்ளது என்று அறிவித்தார்.
இந்த அறிக்கைகள், சீனாவுக்கு எதிரான பிராந்தியத்தில் வாஷிங்டனின் புவிசார் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டாம் என்று ராஜபக்ஷவுக்கு வீடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருந்தன.
COVID-19 இன் பேரழிவு மற்றும் ஆழமான சமூக தாக்கங்களுக்கு மத்தியில், வாஷிங்டன் அதன் அழிந்து வரும் பொருளாதார ஆதிக்கத்தை இராணுவ வழிமுறைகளால் ஈடுசெய்ய இன்னும் உறுதியாக முயற்சிக்கின்றது.
„சீனாவில் தொடங்கிய“ ஒரு “வெளிநாட்டு வைரஸால்” இந்த தொற்றுநோய் ஏற்பட்டது என்ற கூற்றுடன் டிரம்ப் நிர்வாகம் அதன் நச்சுத்தனமான சீன-விரோத வாய்ச்சவடாலை அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு „சீனாவுக்கு பக்கச்சார்பானது“ என்று டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்களுடன் அதற்கான அமெரிக்காவின் நிதியுதவியை வாஷிங்டன் தடுத்து வைத்துள்ளது. ஏப்ரல் 21 அன்று, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை தென் சீனக் கடலுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நகர்த்தியது.
இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அமெரிக்க இராணுவ முகாம் உட்பட, பெய்ஜிங்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் வாஷிங்டன் தனது இந்திய சமத்திர நட்பு நாடுகளை இன்னும் தீவிரமாக ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றது. உலகளாவிய தொற்றுநோய் பூட்டுதலுக்கு மத்தியில் இலங்கை கடற்படை விசேட அணிக்கான முழு போர் பயிற்சியானது, சீனாவிற்கு எதிரான போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகள் மிகவும் முன்னேறியுள்ளன என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.