மூணு இடத்துல இயற்கை விவசாயம் செய்றோம்; வீட்டுத் தோட்டத்துல மூணு பலா காய்ச்சிருக்கு!‘ – நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி
„பல வருஷமா இயற்கை வாழ்வியல் முறையில வாழ்றதில் ஆத்ம திருப்தி எனக்கு. என் பையனுக்கு வெள்ளைச் சர்க்கரை இதுவரை கொடுத்ததேயில்லை. நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி மட்டும்தான் கொடுக்கிறேன்.“
“நான் சென்னையில் வசிக்கிறேன்; சினிமாவில் நடிக்கிறேன். எனவே, 100 சதவிகிதம் இயற்கை வாழ்வியலைக் கடைப்பிடிப்பது என்பது சாத்தியமில்லை. ஆனாலும், படிப்படியா அதை நோக்கி நகர்ந்துகிட்டே இருக்கேன். இன்னைக்கு தவிர்க்க முடியாத விஷயங்களுக்குத் தவிர குறிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு இயற்கை வாழ்வியல் முறையைத்தான் கடைப்பிடிக்கிறேன். இது என் குடும்பத்தினரின் நலனுக்காக. என் பிள்ளைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்காக. விவரிக்க முடியாத மன அமைதிக்காக” – படபடவென வார்த்தைகள் கொட்டுகின்றன ஊர்வசியிடமிருந்து.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் எதார்த்த நடிகையாகப் புகழ்பெற்றவர் ஊர்வசி. இதைத் தாண்டி, இயற்கை ஆர்வலர் என்ற மற்றோர் அடையாளமும் இவருக்கு உண்டு. சென்னை வளசரவாக்கத்திலுள்ள இவரது வீட்டில் தோட்டம் அமைத்திருக்கிறார். மேலும், சென்னை புறநகர் பகுதியில் இரண்டு இடங்களிலுள்ள இவரது நிலத்தில் இயற்கை விவசாயம் நடக்கிறது. வீட்டு வேலைகள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு என லாக்டெளனிலும் பிஸியாகவே இருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் ஊர்வசி.
“கேரளாவில் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஏரூர் கிராமம் என் கணவரின் பூர்வீகம். குற்றாலத்துல இருந்து ரொம்பப் பக்கம்தான் அந்த ஊர். அங்க குடும்பப் பாரம்பர்ய விவசாய நிலங்கள் இருக்கு. அவற்றில் தொடர்ந்து இயற்கை விவசாயம் நடக்குது. அதனால என் கணவருக்கு இயற்கை விவசாயம் பத்தி நிறைய விஷயங்கள் தெரியும். அவர் மூலம் நானும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தவிர நம்மாழ்வார் ஐயா கூறிவந்த இயற்கை விவசாயம், இயற்கை வாழ்வியல் குறித்த விஷயங்களை நீண்ட காலமா படிக்கிறேன். இதனால கணவருக்கும் எனக்கும் இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் உண்டு.
சென்னையை அடுத்தக் கருங்குளி கிராமத்துல எங்களுடைய எட்டு ஏக்கர் நிலம் இருக்கு. அங்க பல வருஷமா தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்றோம். கடந்த ஜனவரியிலதான் சூப்பர் டீலக்ஸ் ரக நெல் அறுவடை முடிஞ்சது. அடுத்து நிலக்கடலைப் பயிரிட்டு அந்த அறுவடையும் முடிஞ்சது. லாக்டெளன் ஏற்பட்டதால அங்க அடுத்த பயிர் சாகுபடி முறைகளை ஆரம்பிக்க முடியலை. அங்க தங்கறதுக்கு வசதிகள் இல்லை. எனவே, மாசத்துல ஓரிரு முறை அங்க போய் விவசாய வேலைகளைக் கவனிச்சுட்டு வருவோம்.
அதேபோல சென்னையை அடுத்த மேலவலம்பேட்டை கிராமத்துலயும் கொஞ்சம் நிலம் இருக்கு. அங்க வீட்டுத் தேவைக்கான காய்கறிகளைப் பயிரிட்டுள்ளோம். மாசத்துல சில முறை அங்க போவோம். விவசாய வேலைகள் சரியா நடக்குதான்னு பார்த்துவிட்டு, புது விஷயங்களைத் தெரிஞ்சுப்போம். அங்கிருந்து காய்கறிகளை வீட்டுத் தேவைக்குக் கொண்டு வருவோம். தவிர, அங்க ஆடுகள் கொஞ்சம் வளர்க்கிறோம்.
மண்ணும் பெண்ணும் சும்மா இருக்கக் கூடாதுனு சொல்வாங்க. இரண்டுமே முறையா பராமரிக்கப்பட வேண்டியவை. அதனாலதான் எங்க நிலத்துல ஏதாவதொரு பயிர் சாகுபடி நடக்கற மாதிரி பார்த்துக்கறோம். கிடைக்கிற விளை பொருளை எங்க வீட்டுக்கு, தோட்ட பராமரிப்பாளர்கள், சொந்தக்காரங்க மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதுதான். அதன் மூலம் லாப நோக்கம் எதிர்பார்க்கறதில்லை” என்பவரின் பேச்சு கேரளா பக்கம் திரும்பியது.
“கேரளாவிலுள்ள கணவரின் கிராமம் ரொம்பவே பசுமையா இருக்கும். எனக்கு ஷூட்டிங் இல்லாம, எங்க பையனுக்கும் ஸ்கூல் லீவ் கிடைச்சுதுனா அங்க வாரக்கணக்குல தங்குவோம். மாமனார், கணவரின் சொந்தக்காரங்க பலரும் சேர்ந்து அங்க விவசாய வேலைகளைப் பார்த்துக்கறாங்க. கருணைக்கிழங்கு, வெத்தலை வள்ளிக்கிழங்கு சிறப்பா விளையும். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஒவ்வொரு கிழங்கும் அங்க 30 கிலோ வரைகூட விளையும். அதைப் பார்க்கவே பிரமாண்டமா இருக்கும். தவிர, பலா, மா, மிளகாய், வாழை, மிளகு, தென்னை உட்பட நிறைய பயிர்கள் அங்க விளையுது.
Also Read
`என் மாடித்தோட்டத்துலயே காய்கறிகள், பழங்கள் கிடைக்குது; வீட்டை விட்டு வெளியே போறதேயில்லை!’ – நடிகை சீதா
சொந்தக்காரங்க எல்லோரும் அவரவர் நிலத்துல விளையும் விளைபொருள்களைப் பகிர்ந்துப்போம். வீட்டுத் தேவைக்கான பெரும்பாலான உணவுப் பொருள்கள் அங்கிருந்தே எங்களுக்குக் கிடைச்சுடும். லாக்டெளனில் சென்னையில்தான் இருக்கேன். ஒருவேளை கேரளாவில் ஏரூர் கிராமத்துல இருந்திருந்தா, விவசாய வேலைகளைக் கூடுதலா தெரிஞ்சுக்க வாய்ப்பு கிடைச்சிருக்குமேனு நினைக்கிறேன்” என்கிற ஊர்வசியின் ஏக்கத்தை வீட்டுத் தோட்டம் நிவர்த்தி செய்திருக்கிறது.
கேரளா ஸ்டைலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இவரின் வீடு. வீட்டைச் சுற்றிலும் தடுப்புச் சுவருக்கு உட்புறமாக சில அடி அகலத்திலுள்ள நிலத்தில் தோட்டம் அமைத்திருக்கிறார். அதில் எலுமிச்சை, மா, பலா, நெல்லி, பாகல், கொய்யா, மாதுளை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை, பல்வகை கீரைகள், மூலிகைகள், பூக்கள் உட்பட ஏராளமான செடிகளும் மரங்களும் உள்ளன. எலுமிச்சை, நெல்லி இரண்டும் அதிகளவில் காய்க்கின்றன. அவற்றில் ஊறுகாய் செய்வதில் ஊர்வசி எக்ஸ்பர்ட். அதுகுறித்தும், இயற்கை வாழ்வியல் முறை குறித்தும் பேசுபவரின் முகத்தில் வழக்கத்தைவிடவும் கூடுதல் புன்னகை எட்டிப்பார்க்கிறது.
“எலுமிச்சை மரத்துல காய் அதிகம் காய்க்குது. அதில் தினமும் ஜூஸ் போடுவோம். நெல்லியும் அதிகம் காய்க்குது. இவை ரெண்டையும் அக்கம் பக்கத்தினருக்கும் கொடுப்போம். மீதமிருக்கும் எலுமிச்சை, நெல்லியைக் கொண்டு நானே ஊறுகாய் செய்வேன். ஊசி மிளகாய் ரொம்பவே சிறுசாதான் இருக்கும். ஆனா, அதன் நுனியைக் கடிச்சாக்கூட சுள்ளுனு காரம் தலைக்கு ஏறும். அதுதான் அந்த மிளகாயின் சிறப்பம்சம். அதுலயும் ஊறுகாய் செய்வேன். தினமும் தயிர் சாதத்துடன் ஊசி மிளகாய் ஊறுகாய் சேர்த்துப்பேன். இந்த ஊறுகாய் உடல்நலத்துக்கு ரொம்பவே நல்லது.
வீட்டுத் தோட்ட, மா மரத்துல இப்பதான் காய்கள் பெரிசாக ஆரம்பிச்சிருக்கு. ஒரு குட் நியூஸ், எங்க பலா மரத்துல முதன்முறையா மூணு காய்கள் வந்திருக்கு. பறிக்க இன்னும் கொஞ்சநாள் ஆகும். சென்னை சிட்டிக்குள் வீட்டித்தோட்டத்துல பலா மரம் வெச்சு அதுல காய்கள் வந்திருக்கிறதைப் பார்க்கிறப்போ, கூடுதல் மகிழ்ச்சி கிடைக்குது. தற்போதைய வெயில் காலத்தால் காய்கறிச் செடிகளை எடுத்துட்டேன். சம்மர் முடிஞ்சதும் மீண்டும் காய்கறிச் செடிகளை நடணும்.
ஆர்வமும் திட்டமிடலும் இருந்தா எல்லாத் தேடலுக்கும் நேரம் செலவிட முடியும். தவிர்க்க முடியாத தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்குப் போகாம இருக்கிற நல்ல உடல்நிலையுடன் இருக்கோம். அந்தக் கொடுப்பினையை இயற்கை வாழ்வியல் முறை கொடுக்குது. இதுதான் நம்ம பாரம்பர்ய வாழ்வியல் முறை.
ஊர்வசி
எங்க விவசாய தோட்டங்கள்ல மாட்டுச் சாணம், ஆட்டு எருவைத்தான் உரமாகப் போடுவோம். வீட்டுத் தோட்டத்துலயும் கிச்சன் கழிவுப் பொருள்களும் சாணக் கரைசல் மட்டும்தான் போடுவோம். தவிர ரெண்டுலயும் துளிக்கூட ரசாயன உரம் போட மாட்டோம்” என்பவர், மண் சட்டியில் மீன் குழம்பு செய்வதில் எக்ஸ்பர்ட்.
“சென்னை மற்றும் கேரளாவிலுள்ள நிலங்கள்ல கிடைக்கும் விளைப் பொருள்கள், வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்களே அன்றாட உணவுத் தேவைக்குக் கணிசமான அளவுக்கு உதவுது. இதுபோக சிறுதானியங்கள் உட்பட சில உணவுப் பொருள்களை மட்டும் இயற்கை விவசாயிகள், விற்பனையாளர்கள்கிட்ட இருந்து நேரடியா வாங்கறோம். அடிக்கடி மீன் குழம்பு செய்வேன். அது எங்க வீட்டில் ரொம்பவே ஸ்பெஷல். இன்னைக்குகூட வழக்கம்போல மண் சட்டியிலதான் மீன் குழம்பு செஞ்சேன். பெரும்பாலும் மண் சட்டியிலதான் சமையல் செய்வோம். மண்பாண்டம், பித்தளை மற்றும் மரப்பாத்திரங்களைத்தான் அதிகம் பயன்படுத்துவேன்” – சற்றே இடைவெளி விடும் ஊர்வசி, வீட்டுத் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
“நீண்ட வருஷத்துக்குப் பிறகு இப்போதான் நாலு மொழிகளில் நடிக்கிறேன். ஆனாலும்கூட விவசாயத் தேடலுக்கான நேரத்தைச் சரியா ஒதுக்க முடியுது. ஆர்வமும் திட்டமிடலும் இருந்தா எல்லாத் தேடலுக்கும் நேரம் செலவிட முடியும். தவிர்க்க முடியாத தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்குப் போகாம இருக்கிற நல்ல உடல்நிலையுடன் இருக்கோம். அந்தக் கொடுப்பினையை இயற்கை வாழ்வியல் முறை கொடுக்குது. இதுதான் நம்ம பாரம்பரிய வாழ்வியல் முறை. ஆனா, காலமாற்றத்துல அதிலிருந்து விலகி ஆபத்தான ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடுறது உட்பட பல வழிகளிலும் வாழப் பழகிட்டோம்.
அது கெடுதலானதுனு தாமதமா உணர்ந்தாலும், பல வருஷமா இயற்கை வாழ்வியல் முறையில வாழ்றதில் ஆத்ம திருப்தி எனக்கு. என் பையனுக்கு வெள்ளைச் சர்க்கரை இதுவரை கொடுத்ததேயில்லை. நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி மட்டும்தான் கொடுக்கிறேன். அவனுக்கு ஒவ்வொரு உணவுப் பொருள்களையும் பார்த்துப் பார்த்துக் கொடுக்கிறோம். அவனாவது இளமைக்காலம் முதலே ஆரோக்கியமா வளரணும். பொண்ணுக்கும் இயற்கை உணவுப் பொருள்கள் குறித்து அடிக்கடி சொல்றேன். இதேபோல எல்லாக் குழந்தைகளும் வளர்ந்தால் எதிர்காலத்தில் அவங்களாவது ஆஸ்பத்திரிக்குப் போகாம நிம்மதியா வாழலாம்.
இதுபோல ஆரோக்கியத்துக்காகவும் மன நிறைவுக்காகவும்தான் இயற்கை விவசாய பணிகளைச் செய்றோம். அது மூலமா லாபம் பார்க்கணும்ங்கிற எண்ணம் எங்களுக்கு எப்போதும் கிடையாது. எதிர்காலத்தில் முழுக்கவே இயற்கையோடு இணைந்த நிம்மதியான வாழ்க்கை வாழணும். அந்த ஓர் ஆசை மட்டும்தான் எனக்கு இருக்கு” என்றவரை இடைமறிக்கும் மகன் இஷானை விளையாட அனுப்பிவிட்டு மீண்டும் தொடர்ந்தவர், லாக்டெளன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
“முன்பு பரபரப்பா நடிச்சுகிட்டு இருந்தேன். இப்போ லாக்டெளனில் ரொம்பவே ஓய்வு கிடைச்சிருக்கு. வீட்டு வேலையாட்கள் யாருமில்லை. சமையல், வீட்டு வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன். இது எனக்குப் பிடிச்ச விஷயம் என்பதால ரசிச்சு செய்றேன். எங்க மகனோடு அதிகம் நேரம் செலவிட முடியுது. இதனால லாக்டெளன் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.
Also Read
அண்ணன் செல்வா, தம்பி தனுஷ், சில சீக்ரெட்ஸ்… – கார்த்திகா ஷேரிங்ஸ்
நாள் முழுக்க கோழியும் மாடுகளும் வெளியில் மேய்ந்தாலும் இரவில் கூட்டுக்கும் பட்டிக்கும் திரும்பிவிடும். அதுபோல நாள் முழுக்க வேலை விஷயமா நாம எங்க போனாலும் இரவில் தங்கும் இடம் வீடாகத்தான் இருக்கணும்” என்று நிறைவாகப் பேசி முடித்தவர் புன்னகையுடன் விடைபெற்றார்.