வளைகாப்பு நடக்கவிருந்த கர்ப்பிணி இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
தமிழகத்தின் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி தெற்கு இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி, தன் கணவருடன் செங்கல்பட்டு தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தற்போது, ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளதால், வளைகாப்பு விழா நடத்த நேற்று முன்தினம், ‘இ-பாஸ்’பெற்று, செங்கல்பட்டிலிருந்து அவரது மாமியார், கணவரின் தம்பி ஆகியோருடன் காரில் வந்தார்.
நத்தக்கரை சோதனைச்சாவடி கண்காணிப்பு மையத்தில் மூவருக்கும் பரிசோதித்ததில், கர்ப்பிணிக்கு மட்டும், கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருடன் பயணித்த, 46 வயது மாமியார், 24 வயதுடைய கணவரின் தம்பி ஆகியோரும் சேலம் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்னர் சுகாதாரத்துறை, பேரூராட்சி பணியாளர்கள், நேற்று, செந்தாரப்பட்டி தெற்கு இலங்கை தமிழர் முகாமிலுள்ள, 60 குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.