November 21, 2024

தொடங்கியது முள்ளிவாய்க்காலிலும் கெடுபிடி?

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் பொலிஸ் வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை கண்காணிப்பது புகைப்படம் எடுப்பது அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிப்பது போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
அத்தோடு வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
மே 18 அன்று தமிழின பேரவலத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில் அரசின் நடவடிக்கைகள் இவ்வாறு அமைந்துள்ளது .