November 22, 2024

மீண்டும் சிக்கினார் சுமந்திரன்? நடந்தது என்ன?

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன்.

அவர் தனது கேள்வியில்

சர்ச்சை’ பற்றிய சுமந்திரன் சேரின் காணொலி பார்த்தேன்.

சட்டத்தரணிகளுக்கு மிக முக்கியமான திறன் பொருள்கோடல் – interpretation (வியாக்கியானம்) செய்யும் திறன் என்று கூறுவார்கள். அது சேருக்கு அபரிதமாக உண்டு. அரசியல்வாதிகள் சர்ச்சையில் மாட்டும் பொழுது நாம் அடிக்கடி கேட்பது ‘எனது கருத்தை அதன் சூழமைவில் இருந்து வெளியில் எடுத்துக் பேசுகிறார்கள்’ என்று. இதுவும் சேரின் காணொளியில் நிறைய உண்டு. சனாதிபதி சட்டத்தரணியின் சொல் பிரித்து மேயும் திறனை விட்டுப் பார்க்கும் போது என்னுள் எழும் விடயங்கள் /கேள்விகள் பின்வருமாறு:

1. சுமந்திரன் அவர்கள் தன்னை ஒரு ஆயுத மறுப்பாளானாக அகிம்சைவாதியாக முன்னிறுத்துகிறார். இதனை தத்துவவியல் பரப்பில் யுத்த மறுப்பு வாதம் ‘pacifisim’ என்பார்கள். அதாவது எந்த சந்தர்ப்பத்திலும் ஆயுதமோ வன்முறையோ பிரச்னைக்கு தீர்வாகாது என்பது. அதனது மாற்று தத்துவம் ‘நீதிக்கான யுத்தம்’ (just war) என்பதாகும் – அதாவது நியாயமான காரணங்களுக்காக ஆயுதம் தாங்கி போராடலாம், போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடையோர். இந்த காணொளியில் தன்னை ஆயுத மறுப்பாளராகவும் pacifist ஆகவும் சுமந்திரன் அவர்கள் தன்னை முன்னிறுத்துகின்றார். அதன் பின்னர் ஓர் இடத்தில் ‘ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போரிட்டவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்’ என்று சொல்கின்றார். இதுவும் pacifist நிலைப்பாட்டின் தொடர்ச்சி தான், தொடர்ச்சியாக தான் கணிக்க வேண்டி உள்ளது. இங்கு முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் அறம் தொடர்பில் சுமந்திரன் சேர் இந்தக் காணொளியில் ஒன்றுமே சொல்லவில்லை. ஆகவே அர்ப்பணிப்பை மதிக்கிறேன் ஆனால் ஆயுதம் தாங்கியது அறமா என்பது தொடர்பில் இந்த நேர்காணலில் அமைதி காக்கிறார்.

ஆனால் அவரது pacifist நிலைப்பாட்டின் logical conclusion அது அறம் இல்லை என்பது தான். இது தான் சர்ச்சை. ஆகவே கேள்வி நீங்கள் ஆயுதம் ஏந்த தயாரா என்பதல்ல. கேள்வி நீங்கள் வன்முறையாளரா என்பதல்ல. (இந்த சுத்து – உங்களின் வழமையான மடைமாற்று) கேள்வி உங்கள் pacificsm தமிழ் தேசிய அரசியலோடு ஒத்துப் போவதா என்பது தான். நான் உங்கள் ஆயுத போராட்ட மறுப்பை உங்கள் சொந்தக் கருத்தாக ஏற்கத் தயார். ஆனால் நீங்கள் எங்கிருந்து அரசியல் செய்கிறீர்களோ அதோடு உங்கள் அரசியல் பார்வை ஒத்துப் போகாவிட்டால் அங்கிருந்து அரசியல் செய்வதன் நேர்மை என்ன?

என்னைப் பொறுத்தவரையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் தமிழ் தேசிய சுயநிர்ணய அரசியலில் ஒரு இயல்பான வளர்ச்சி – தவிர்க்கமுடியாத ஒரு கட்டம். அது அறமானதே. அது நியாயப்படுத்தக் கூடியதே. அத்தகைய அரசியல் சிந்தனாமுறையின் மீதி கட்டியமைக்கப்பட்டதே தமிழ் தேசிய அரசியல். இதை மறுத்துக் கொண்டு கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்வது நேர்மையல்ல. இதுவே எனது இந்த சர்ரச்சை தொடர்பிலான முதலாவது பதிவில் சொன்னது.

2. ஆயுதப் போராட்டத்தின் அறத்தை ஏற்றுக் கொள்வோர் அதன் வழி தமிழ் தேசிய அரசியலை விளங்கிக்கொள்வோரை உசுப்பேற்றிகள் என்று சுமந்திரன் அவர்கள் சொல்வது சுத்த அபத்தம். 2009 க்குப் பின் யாருமே ஆயுதம் தாங்கி போராட வேண்டும் என்று கேட்டதாக எனக்கு தெரியாது (திருவாளர். சிவாஜிலிங்கம் கூட கேட்டதில்லை). சுமந்திரன் அவர்களின் இந்த சுத்து அவரது வழமையான விவாத பாணி – ஒரு மடைமாற்று தந்திரம் – diversionary tactic. அடிப்படை நேர்மையில்லாதது. இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்தின் அர்ப்பணிப்பை மாத்திரம் மூலதனமாக்கி தேர்தல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை (வீடு, சைக்கிள், மீன் உள்ளிட்ட அனைவரையும்) நான் வெறுக்கிறேன். அப்படியான அரசியல்வாதிகளோடு சேர்ந்து தேர்தல் கேட்டு அதனால் பயனடைந்தும் விட்டு சுமந்திரன் அவர்கள் பொங்குவதிலும் ஒரு நேர்மை இல்லை. ஆனால் ஆயுதப் போராட்டத்தின் அறத்தை ஏற்றுக் கொண்டவர்களை, ஏற்றுக் கொண்டும் அரசியல் செய்வோரை இவர்களோடு சேர்த்து அடைப்பிட்டு எங்க ஆயுதம் தூக்கு பார்ப்பம் எண்டு வன்மம் பேசுவது நிதானமற்ற வங்குரோத்து அரசியல்.

அதே போன்று தான் உங்களை ஒருவரும் புலிக் கொடியோடு பேச்சுவார்த்தைக்கு போகக் கேட்கவில்லை. எதிராணியால் முன்வைக்கப்படாத ஒன்றை முன்வைத்து அதனை அடி அடி என்று அடிப்பதற்கு ‘straw man fallacy’ என்று பெயர். இதுவும் ஒரு பாடசாலைக் கால மட்டமான விவாத தந்திரம். (சரி புலிக் கொடியோடை போகாம விட்டும் என்ன தீர்வு கண்டியல் என்றும் கேட்கலாம். ஆனால் வேண்டாம். அது பிறகு பார்ப்பம்.)

3. சிங்களவர்களோடு நாம் ஒளித்து மறைத்து பேச முடியாது என்று நான் நம்புகிறேன். தமிழர்கள் ஆயுதம் தூக்குவதில் நியாயம் இருந்தது என்று தான் அவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆனால் எங்களுக்கு இந்த தீவில் சுயநிர்ணய உரிமை கிடைத்தால் ஒரு தீவில் ஒன்றாக ஒரு நாடாக வாழலாம் தடையில்லை என்று கூறவேண்டும். சிங்கள மக்கள் வெளிப்படையான பேச்சை கேட்பார்கள் என நான் நம்புகிறேன். அது அவர்களின் நன்மதிப்பை பெறும் என்றும் நான் நம்புகிறேன். பூசி மெழுகி ஒளிச்சு மறைச்சு பேசி ஒரு போதும் சிங்கள மக்களின் நன்மதிப்பையோ ஆதரவையோ பெற முடியாது என நான் நம்புகிறேன்

4. எல்லாவற்றையும் விட அபத்தம் தமிழரசுக் கட்சியினரை அகிம்சா மூர்த்திகளாக காணொளியில் சுமந்திரன் அவர்கள் பூசி பூசி மெழுகுவது தான். இதே தமிழரசுக் கட்சியினர் தான், சுமந்திரன் அவர்களின் வார்த்தைகளை பாவிப்பதாயின், மேடைக்கு மேடை உசுப்பு உசுப்பு என்று உசுப்பேற்றி இளைஞர்களை பெருவாரியாக ஆயுதம் தூக்க தள்ளினார்கள். மறந்து போச்சா சேர்? இது எந்த வகையில் அகிம்சா குணம்? நீங்கள் சொல்லும் இதே ஈழத்து காந்தி தான் 1975 இடைத் தேர்தலில் தமிழீழ பிரகடனம் செய்தவர். அது உசுப்பு இல்லையா? 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றய்ய போது அதனை அடைவதற்கு என்ன திட்டம் வைத்திருந்தீர்கள் என்று கூட்டணி தலைவர் ஒருவரிடம் 10 வருடம் களித்து தமிழ் இளைஞர் ஒருவரால் கேட்கப்பட்ட போது. ‘அதையெல்லாம் யார் யோசிச்சார் தம்பி’ என்று பதில் வந்ததாக ஓர் பதிவு உள்ளது. (https://tamilnation.org/saty/9907amirthalingam.htm…) இது தானா பொறுப்பான அகிம்சைவாதம்? இதற்கு மாவை ஐயாவின் வரலாற்று அறிவு எவ்வளவோ பரவாயில்லை.

5. எனது முகப்புத்தகத்தில் எனது நண்பர்களாக இருக்கும் சுமந்திரன் அவர்களின் அதி தீவிர விசுவாசிகள், இடதுசாரி அரசியல் பேசும் தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் தாராளமாக அவரின் கெத்தான சர்ச்சைக்கான காணொலியை பகிர்ந்திருந்தார்கள். இதில் இரண்டாம் வகையினரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆயுதப்போராட்டத்தை ஆழமற்ற மேம்போக்கான அடிப்படைகளில் நிராகரிக்கும் சுமந்திரன் அவர்களின் நிலைப்பாடுகளில் அவர்கள் குளிர்காயும் ஒரே புள்ளி தமிழ்த்தேசிய புலி எதிர்ப்பு மாத்திரமே. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள். ஆனால் இனி மேல் கொண்டு இவர்களில் யாராவது Frantz Fannon, Che Guevera, Nelson Mandela, Judith Butler, Antonnio Gramsci என்று புத்தகங்களை தூக்கிக் கொண்டு வந்தாலோ அல்லது காஷ்மீர சுயநிர்ணயப் போராட்டம், பலஸ்தீன சுயநிர்ணய போராட்டம், குர்திய சுயநிர்ணய போராட்டம் என்று சொல்லிக் கேட்டாலோ நான் குப் என்று சிரித்தால் என்னை மன்னிக்க வேண்டும்.