November 22, 2024

கட்டாய ஆட்சேர்ப்பு செய்த கண்ணதாசனிற்காக முன்னிலையானார் சுமந்திரன்: விடுதலையா? மீள் விசாரணையா? வெளியான தகவல்

கட்டாய ஆட்சேர்ப்பு செய்த கண்ணதாசனிற்காக முன்னிலையானார் சுமந்திரன்: விடுதலையா? மீள் விசாரணையா? வெளியான தகவல்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம், மேன் முறையீட்டு மனுதாரரின் சட்டத்தரணி ஜானதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே, மேன் முறையீட்டு நீதிமன்றம் மேற்படி தீர்மானத்துக்கு வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் நுண்கலைக் கல்லூரியின பொறுப்பாளராக இருந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி,யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாசன் என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் 50 வயதுடைய கனகசுந்தரம் கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டினை உள்ளடக்கி குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றதுடன், இது குறித்த வழக்கை சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் சாட்சி விசாரணைகளின் பின்னர் கடந்த 2017 ஜூலை 25 ஆம் திகதி இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய வவுனியா மேல் நீதிமன்றம், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் க.கண்ணதாசனை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்நிலையிலேயே அந்த தண்டனைக்கு எதிராக க.கண்ணதாசன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். அது குறித்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரட்ணம், ‘ குறித்த தீர்ப்பு தொடர்பில் முழுமையாக உடன்பட முடியாவில்லை எனவும், அதனால் அந்த விவகாரத்தை மீள விசாரணை செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்.’ எனவும் தெரிவித்தார்.

இந் நிலையில் மேன்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணத்தின் கருத்தை மேற்கோள் காட்டி, தனது சேவை பெறுநரான க.கண்ணதாசனை விடுவிக்க வேண்டும் என கோரினார்.

எவ்வாறாயினும் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், இன்று வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளி க.கண்ணதாசன் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் , மேன் முறையீட்டு மனுதாரர் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தபோது கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் ஆட்சேர்ப்பிற்கு பொறுப்பாக இருந்த கண்ணதாசன், அந்த பகுதியை “வழித்து துடைத்து“ ஆட்சேர்ப்பு செய்ததாக பிரதேசவாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.