ஆயுதங்களில் நம்பிக்கையற்ற சுமந்திரன் எதற்கு இலங்கை அரசின் ஆயுத பாதுகாப்பில் வாழ்கிறார்?:
தமிழரை கொன்றொழித்த இலங்கை அரசின் ஆயுதப் பாதுகாப்பை பெற்று உயிர்வாழ்ந்து வரும் சுமத்திரன் தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பற்றி பேச தகுதியற்றவர்.
எமது இனத்தின் உரிமை போராட்டங்களை கொச்சைப்படுத்தும் இவரை தமிழ் மக்கள் அரசியலில் இருந்து ஓரம் கட்டவேண்டும் என வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் அனந்தநடராசா லீலாதேவி தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகம் ஒன்றில் நேர்காணலின் போது புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறிய விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற பதவியில் இருந்துகொண்டு தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அவர் கூறிய கருத்து எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான கண்டனத்தை எமது சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இது அவரது தனிப்பட்ட கருத்து என கூறி அவர் தப்பித்துக்கொள்ள முடியாது. அவர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியில் இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் போது அதன் பின்னர் ஏற்படும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
குறித்த நேர்காணலில் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய். விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அவர் அதன்மூலம் வந்த கூட்டமைப்பை எப்படி ஏற்று போட்டியிட்டார்? எப்படி அந்த கூட்டமைப்பில் பேச்சாளர் என்ற பதவியை பெற்றார் என்பது சந்தேகமாக உள்ளது.
தமிழர் பகுதிகிளில் புலிகளால் உருவாக்கப்பட கூட்டமைப்பு என்பதால் தான் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்கிறார்கள் – கட்சியின் பெயர் சொல்லி ஆசனம் பெற்ற இவர் புலிகளின் பெயரால் பதவிக்கு வந்த இவர் இக்கருத்தை எப்படி கூற முடியும்? ஆரம்பத்தில் கட்சிக்குள்ளேயே செல்வாக்கு இல்லாமால் இருந்த இவர் சதிகள் மூலம் பதவிகளை பெற்று செல்வாக்குகளை பெற்ற பின்னர் இவ்வாறு எதிர்மறையான கருத்துக்களை சொல்லி வருகிறார்.
ஆயுதத்தை நம்பாதவர் தனக்கு ஆபத்து என பொய் கூறி அப்பாவி போராளிகளை சிறைக்குள்ளே தள்ளி தமிழரை கொன்றொழித்த அரசிடம் பாதுகாப்பு பெற்றுள்ளார்.
இலங்கை அரசின் ஆயுதத்தை நம்பி உயிர்வாழ்ந்து வரும் சுமத்திரன் தமிழரின் உரிமைக்கான ஆயுத போராட்டத்தை பற்றி பேச தகுதியில்லாதவர்.
மேலும் காணாலம் போனவர்கள் விடயம் , அரசியல் கைதகிள் விடுவிப்பு, காணி விடுவிப்பு தொடர்பில் தான் என்ன செய்தார் என மக்களுக்கு தெரியும் என்கிறார் – எமக்கு தெரியும் அவர் எதையும் செய்யவில்லை என்று. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான எமது போராட்டத்துக்கும் கோரிக்கைகளுக்கும் உதவி செய்யாமல் கண்டும் காணாமல் இருந்தார்
அரசியல் கைதிகளை விடுவித்ததாக கூறுகிறார் சிலரை விடுவித்திருக்கலாம். அது பணத்தின் மேல் உள்ள ஆசையில் அப்பாவிகளிடம் பணத்தை பெற்று விடுவித்திருக்கலாம். ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
கடந்த அரசை வைத்து எமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்று தந்திருக்கலாம் ஆனால் அதைச் செய்யவில்லை- அரசுக்கு முண்டு கொடுப்பதும் ரணிலுக்கு பாதிப்பு வரும் போது காப்பாற்றுவதிலும் குறியாக இருந்தார்.
முன்னுக்குப் பின் முரணாக பேசுபவர் இவர் என அனுவருக்கும் தெரியும்- வெளிநாடுகளில் போய் தமிழ் மக்களில் அக்கறை உள்ளவர் போல பேசுவதும் சிங்கள மக்களிடையே தமிழரின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தெரிவிப்பதும் வழக்கமாக்கிவருகிறார்.
எம்மீது சேறு பூசியது மட்டுமல்லாமல் உரிமைக்கான போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியுள்ளார். இவர் தமிழனா என்று சந்தேகம் எமக்கு இப்போது தமிழ் உணர்வு அற்ற ஒருவராகவே இவரின் செயற்பாடுகள் உள்ளது. தனி நபராக அவரின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றால் தனது பதவியை விட்டு விலகி இருந்து பேச வேண்டும். அதை விடுத்து புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் இருந்து கொண்டு பொறுப்பற்ற கருத்துக்களை பேசக்கூடாது. இதற்கு கட்சி தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது இனத்தின் உரிமை போராட்டங்களை கொச்சைப்படுத்தும் இவரையும் இவரைப்போன்ற நபர்களையும் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து ஓரம் கட்டவேண்டும். இவருக்கான பலத்த கண்டனத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம் .