தமிழ்செல்வனின் பின்னால் பைலை தூக்கிக் கொண்டு திரிந்தவர்தான் சம்பந்தன்: ரணிலின் புத்திதான் சுமந்திரனுக்கு!
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துகொண்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் சுமந்திரனும் சம்பந்தனும் தெரிவிக்கும் கருத்துகள் தொடர்பில் விமர்சனங்களை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் முடியுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறட்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிக் காட்டட்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.
இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப் புலிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதை சம்பந்தன் மறுத்து விட்டார். அல்லது மறுதலித்து வருகிறார். முள்ளிவாய்க்காலில் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லையென சம்பந்தன் கூறி வருகிறார். புலிகள் இல்லையென்பதால் விரும்பியதை கூற தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் பின்னால் சம்பந்தன் பைல் தூக்கிக் கொண்டு திரிந்த வரலாறும், படங்களும் உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவான உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கூட்டமைப்பிற்குள் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள், புலிகள்தான் கூட்டமைப்பை உருவாக்கியதென. இன்னொரு தரப்பினர், புலிகள் இல்லையென கூறி வருகிறார்கள்.
கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருக்கும் நிலையில், புலிகளிற்கு எதிரான கருத்தை சுமந்திரன் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தாகாது. சுமந்திரன் புலிகளை அவதூறாக பேசும் போது, அது அவரது தனிப்பட்ட கருத்து என கூறி விடுவார்கள். பல தடவை அவர் அப்படி பேசியும் ஏன் இதுவரை அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கவில்லை? அந்த கருத்தை ஏற்பதால்தானே.
தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கியிரா விட்டால், சுமந்திரனுக்கு தேசியப் பட்டியலே கிடைத்திராது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்தது, சுமந்திரனுக்காகவோ மற்றவர்களிற்காகவே அல்ல. அது புலிகளிற்காகவே வாக்களித்தனர். அதையெல்லாம் மறந்துதான் சுமந்திரன் பேசியுள்ளார்.
சுமந்திரனின் கருத்தை வாபஸ் பெற வேண்டுமென கூட்டமைப்பில் சிலர் கூறுகிறார்கள். வாபஸ் பெற்றால் புலிகளிற்கு எதிராக பேசியது சரியாகி விடுமா?
சுமந்திரனின் வழிகாட்டியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கில் ஒன்று, தெற்கில் ஒன்று பேசுபவர். சுமந்திரனால் வழிகாட்டப்பட்டு, ஐ.தே.கவின் பங்காளியாக இருந்த கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. ரணிலின் புத்திதான் சுமந்திரனுக்கும் உள்ளது.
2015 முதல் நாங்கள் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தி எங்காவது பேசிய ஒரு வசனத்தையாவது யாராலும் காட்ட முடியுமா? எமது போராட்டத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர்கள் புலிகள். அந்த நன்றிக்கடன் எமக்குண்டு. அதையெல்லாம் மறந்துதான் சுமந்திரன் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்றார்.