முந்திக்கொண்ட டக்ளஸ்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அவர்களது பெயர் விவரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளரும்; அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினரால், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளது.
இதனிடையே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான ஆவணங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை தனக்கு தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் வினவியிருந்தார்.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட சகல காரணிகளையும் தயார்படுத்தியிருந்த சுமந்திரன் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் கேட்டிருந்தார்.
எனினும் இன்றைய தினம் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்காத பிரதமர் நாளைய தினம் இரவு 7 மணிக்கு சந்திப்பிற்கான நேரத்தை வழங்கியிருந்த நிலையில் எம்.எ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில் முந்திக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா இன்று மகிந்த ராஜபக்சவை சந்தித்து அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் பற்றி உரையாடியுள்ளார்.