வலுத்தது எதிர்ப்பு: பின்வாங்கியது இலங்கை அரசு?
ஆசிரிய சங்கங்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களது எதிர்ப்பினையடுத்து இலங்கையில் அரச ஊழியர்கள் தமது மே மாதச் சம்பளத்தை பகுதியளவிலோ அல்லது முழுமயாக, நன்கொடையாக வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் பி.வி.ஜெயசுத்தர கோரியது, அவரது தனிப்பட்ட கோரிக்கை. அது அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கை கிடையாது என்று அரசாங்கம் இன்று (08) பின்வாங்கியுள்ளது.
இது தொடர்பில் பேசிய அரச ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன “அது ஒரு நபரின் கோரிக்கை என்பது கடிதத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நன்கொடை வழங்குவது கட்டாயமில்லை.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி செயலாளர் அவ்வாறு கோரியதற்காக சமூக வலைத்தளங்களில் நியாயமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார்”என்று கூறினார்.
அரச அலுவலர்கள் தமது மே மாத கொடுப்பனவை அனாதைகள் மற்றும் விதவைகள் ஓய்வூதியத்திற்கு வழங்கவேண்டுமென பி.வி.ஜெயசுத்தர தெரிவித்திருந்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்தே இலங்கை அரசு பின்வாங்கியுள்ளது.