காவல்துறையே களவெடுத்தது:காணாமல் போனோர் சங்கம்!
திருகோணமலையில் காணாமல் போனோர் உறவுகளின் சங்க கொட்டிலை களவாடியது காவல்துறையே என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
“ஊரடங்கு சட்டத்தில் ஊரே அடங்கியிருக்கும் வேளையில் அறவழியில் ஆண்டுகள் கடந்தும் போராடும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நடத்தும் கொட்டிலை காவல்துறைக்கு தெரியாமல் எவரும் அகற்றியிருக்க முடியாது! இந்தத் தேவை வேறு எவருக்கும் இந்த கொரணா காலத்தில் இல்லவே இல்லை! ஆகவே ஊர் அடங்கிய நேரத்தில் இந்த ஈனச் செயலை அரச கூலிப்படையே செய்திருக்க வேண்டும் என அவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர்.
திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அவ்வமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா நேற்று முன்தினம் (04) முறைப்பாடு செய்துள்ளார்.
“கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் அமைப்பினர் தங்களது உறவுகளைத் தேடி அவர்களுக்காக போராட்டம் மேற்கொண்ட கூடாரத்தை, நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் இவ்வாறு ஈனத்தனமாக அகற்றியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்குரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் மிக விரைவில் எடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.