November 22, 2024

வட கொரிய தலைவர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை -தென்கொரியா!!

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.

36 வயதான கிம் ஜோங் உன், கடந்த ஏப்ரல் 12ஆம் திகதிக்கு பின்னர், வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு வதந்திகள் பரவின.
கிம் ஜோங் உன், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், இருதய சிகிச்சையின் பின் சுயநினைவு அற்ற நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்தநிலையில், சுமார் 3 வாரங்களுக்கு பிறகு நேற்று முன் தினம் (சனிக்கிழமை) பொதுவெளியில் தோன்றி தன்மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கிம் ஜோங் உன், பியோங்யாங்கின் தலைநகருக்கு அருகிலுள்ள சன்ச்சியோனில் ஒரு உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் கணொளிகளை வடகொரிய ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக்கின.
எனினும், வட கொரிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் கிம்மின் மீள் எழுச்சி, அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்ற தீவிர வதந்திகளைத் தணித்தாலும், சில ஊடகங்களும் பார்வையாளர்களும் கிம்மின் உடல்நலம் குறித்து இன்னும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தொழிற்சாலையை சுற்றிப்பார்க்கும் போது, அவரது நடை சற்று கடினமாக இருந்த தருணங்களை மேற்கோள் காட்டி இந்த கேள்விகளை அவர்கள் தொடுத்துள்ளனர்.
இந்தநிலையின் பெயர் குறிப்பிடாத தென் கொரியாவின் மூத்த அதிகாரியொருவர், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை ஜனாதிபதி மாளிகையான ப்ளூ ஹவுஸ் உறுதிப்படுத்தியுள்ளதனையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
உலகின் மிக ரகசிய நாடுகளில் ஒன்றான வட கொரியாவின் முன்னேற்றங்களை உறுதி செய்வதில் தென் கொரியா ஒரு கவனத்தை ஈர்க்கிறது.
ஆனால், சமீபத்திய வாரங்களில் கிம் உடல்நலம் குறித்த வதந்திகள் வெளிவந்தபோது, தென் கொரிய அரசாங்கம், இந்த செய்தி ஆதாரமற்றது என்று உறுதியாக நிராகரித்ததுடன், வட கொரியாவில் அசாதாரண நடவடிக்கைகள் எதுவும் இல்லை எனவும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.