கொரோனா வெளிக்காட்டும் சிங்கள இராணுவத்தின் இயங்கு திசை – ஓதுவோன்
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஏற்பாடாக தொடர் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இடையிடையில் அறிவிக்கப்படும்
ஊரடங்கு விலக்குக் காலத்தில் வடக்கில் இருந்து விடுமுறைக்குச் சென்று திரும்பும் இராணுவத்திற்கான தனிமைப்படுத்தல் மையங்களிற்கு கல்விசார் நிலையங்களை பயன்படுத்தும் நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் கல்விச் சமூகம் இராணுவத்தால் மிரட்டப்படுகிறது.
இலங்கை முழுவதிற்குமான தனிமைப்படுத்தல் மையங்களில் பெரும்பாலானவை தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்தகைய முடிவுகளை சுகாதாரத்துறைக்கும் மக்களாட்சிக் கட்டமைப்புகளிற்கும் அப்பால் இராணுவத்தினரே எடுப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது.
தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமக்களிற்குள் நடமாடுகிறார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றன.
இன்னொரு புறம் பாடசாலைகள் உட்பட்ட சிவில் சமூக நிலையங்களில் தொற்றுநீக்கம் செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் சிவில் சமூகத்திலும் அது சார்ந்த கட்டமைப்புகளிலும் இராணுவத்தினரே முதன்மைப் பாத்திரம் வகிக்கின்றனர். இராணுவம் நினைத்தால் கொரோனாவை பரப்பவும் முடியும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று சொன்னால் அது மிகையல்ல என்ற நிலையே காணப்படுகிறது.
தமிழர் தாயகப்பகுதிகளில் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்ணளவாக நான்கு பொதுமக்களிற்கு ஒரு இராணுவத்தினன் என்ற விகிதத்தில் இராணுவத்தினரின் அளவு பேணப்படுகிறது.
இது மரணவீட்டிலும் திருமணவீட்டிலும் மாலை இராணுவத்திற்கே என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய இராணுவ மயமாக்கம் ஒரு திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கான ஏற்பாடு என்றும் எந்தக் காலத்திலும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி நேரடி அழிப்பையோ அல்லது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையோ மேற்கொள்ளவே இராணுவ எண்ணிக்கை அதிகரிப்பு திட்டமிடப்படுகிறது என்ற வாதத்தை வலுவாக்குகிறது.
1985 இல் சுமார் 22,000 ஆக இருந்த இலங்கை துணைப்படை மற்றும் இராணுவத்தை உள்ளடக்கிய இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 1990 இல் இருந்து 1991 காலப்பகுதியில் நான்கு மடங்கிற்கும்; அதிகமாக வளர்ச்சியடைந்து சுமார் 110,000 ஆக மாறியது. பின்னர் 1994 இல் இருந்து 1995 காலப்பகுதியில் இந்தத்தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்து சுமார் 235,000 ஆக மாறியது. இதன் பின்னர் 1995 இல் இருந்து 2013 வரை இராணுவத்தின் எண்ணிக்கையில் பாரிய அளவு மாற்றம் ஏற்படவில்லை.
அண்ணளவாக 225,000 இற்கும் 250,000 இற்கும் உள்ளேயே இருந்தது. இதற்கு 2009 வரை நீடித்த யுத்தத்தம் காரணமாக ஆட்சேர்ப்பும் இழப்பும் ஏற்பட்டதை காரணங்களில் ஒன்றாக சொல்லலாம். ஆனால் 2013 இல் சுமார் 225,000 ஆக இருந்த இராணுவம் மற்றும் துணைப்படையின் எண்ணிக்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தொடர்ச்சியான அதிகரிப்பை ஏற்படுத்தி 2020 இல் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படையின் எண்ணிக்கையை சுமார் 350,000 ஆக உயர்த்தியிருக்கிறது.
இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்ட மிகை அதிகரிப்புக் காலப்பகுதிகளாக 1990 ,1994 மற்றும் 2013 இற்குப்பின்னர் என மூன்று பிரதான காலப்பகுதிகளை குறிப்பிடலாம். 1990 காலப்பகுதியும் 1994 காலப்பகுதியும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்த தயார்ப்படுத்திய முக்கியமான காலப்பகுதிகள். அந்தக் காலப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட எண்ணிக்கை அதிகரிப்பு யுத்தத்திற்கான தேவையை அடிப்படையாகக்கொண்டது என்பதை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏதும் இல்லை. அதே போல் 1995 இற்குப் பின்னர் எண்ணிக்கையில் பாரிய மாற்றம் ஏற்படாமைக்கு தொடர் யுத்தம் ஏற்படுத்திய இழப்பும் யுத்தத்தின் அச்சம் ஏற்படுத்திய ஆட்சேர்ப்பு வீதத்தின் வீழ்ச்சிகளும் காரணங்களில் முக்கியமானவைகளாக இருப்பதையும் கண்டறியலாம்.
ஆனால் 2009 இல் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை முற்றாக அழித்தொழித்த பின்னர் இராணுவத்தின் எண்ணிக்கையில் குறிப்பிட்ட காலத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படவும் இல்லை அதற்கான தேவையும் யுத்தம் சார்ந்து இருந்ததும் இல்லை. இதனால் இராணுவம் மற்றும் துணைப்படையின் எண்ணிக்கை சுமார் 225 000 ஆகவே இருந்தது. இந்த எண்ணிக்கை 1995 இல் இருந்து இரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக மாறாது பேணப்பட்ட எண்ணிக்கை என்பதையும் கவணிக்கலாம். ஆனால் 2013 இன் பின்னர் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியான வளர்ச்சியைக் காண்பித்து சுமார் 350 000 ஆக உயர்ந்திருக்கிறது.
யுத்தம் இல்லாத சூழலில் அதுவும் 2013 இற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய தொடர் அதிகரிப்பின் நோக்கம் பற்றி கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியமானது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சூழலில் உள்நாட்டில் விடுதலைப்புலிகளின் பலத்தை முற்றாக இல்லாதொழித்த பின்புலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படையின் எண்ணிக்கை 2013 இற்குப் பின்னர் சுமார் 225 000 இல் இருந்து சுமார் 350,000 ஆக வலிந்து உயர்த்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் 2013 இல் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்த போதும் சரி அதன் பின்னர் நல்லாட்சி அரசு என சொல்லப்பட்ட மைத்திரி ரணில் கூட்டு ஆட்சியில் இருந்தபோதும் சரி இந்த அதிகரிப்பு தன்னுடைய தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்கில் எந்த வித தடுமாற்றத்தையும் காட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால் இத்தகைய பாரிய அளவிலான தொடர் இராணுவ வளர்ச்சி என்பது அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் தலைமைத்துவம் என்பவற்றிற்கும் அப்பால் இராணுவத்தை மையமாக வைத்து இலங்கை அரச இயந்திரம் பாரிய மூலோபாய நகர்வு ஒன்றினைத் திட்டமிடுகின்றது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இலங்கை அரச இயந்திரத்தை இயக்கும் இரு சக்கரங்களாக இராணுவமும் பௌத்த பீடமும் இருந்து வருவது இலங்கை வரலாற்றில் வழமையான இயங்குமுறை. “கோரோனாவை ஜனாதிபதி மிக சிறப்பாக கையாளுகிறார் என்ற ஆரம்பகால அபிப்பிராயம் இப்போது பலவீனமடைந்துவிட்டது. சுகாதாரம் பற்றி இராணுவத்திடமும், அரசியலமைப்பு பற்றி தேரர்களிடமும் ஆலோசனை கேட்கும் நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டா இருக்கின்றார்”
என மனோகணேசன் அவர்கள் குறிப்பிட்டிருப்பது இப்போதும் அரச இயந்திரத்தை இயக்கும் இரு சக்கரங்களாக இராணுவமும் பௌத்த பீடமும் இருப்பதைக் காட்டுகிறது.
இவ்வாறான வரலாற்றுப் பேருண்மையின் அடிப்படையில் இலங்கை இராணுவமும் பௌத்தபீடமும் திட்டமிடும் அத்தகைய இராணுவத்தை மையப்படுத்திய மூலோபாயம் என்னவாக இருக்கும்? இலங்கை இராணுவத்திற்கு இருக்கக்கூடியது இரண்டு பிரதான மூலோபாய நோக்கங்கள் தான். ஒன்று இலங்கையில் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்வது அடுத்தது வெளிநாட்டுப் போரை எதிர்கொள்வது.
வெளிநாட்டுப் போரை எதிர்கொள்வது அமெரிக்கா இந்தியா சீனா என முறுகல் அடையும் பிராந்திய அரசியலில் இலங்கையின் புவிசார் அரசியலும் அதன் வகிபாகமும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் மேற்சொன்ன சக்திகளில் ஒன்றில் இருந்து குறிப்பாக அமெரிக்கா சார்பான இந்தியாவில் இருந்து இராணுவ ஆக்கிரமிப்பை இலங்கை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற கணிப்பு உள்ளதன் பின்னணியில் இத்தகைய இராணுவ எண்ணிக்கை அதிகரிப்பை பார்க்கலாம். ஆனால் இராணுவ எண்ணிக்கை அதிகரிப்பிற்கேற்ப நேர் விகிதத்தில் இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்ப படைக்கலன் அதிகரிப்பு இல்லை என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அத்துடன் அந்நிய படைபெடுப்பை முறியடிக்கக்கூடிய தேசிய பாதுகாப்பு வியூகங்களோ அல்லது குறிப்பாக இலங்கை கரையோரங்கள் முழுவதையும் இணைத்த இராணுவ வியூகங்களிற்கான தடயங்களையோ போதிய அளவில் காண முடியவில்லை.
இந்தியாவை இராணுவ தொழில்நுட்ப படைக்கலன் மற்றும் புவியியல் அமைவிடம் போன்ற காரணிகளால் நேரடி போர் ஒன்றின் மூலம் இலங்கை எதிர்கொள்ளமுடியாது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலும் மேற்சொன்ன காரணங்களாலும் வெளிநாட்டுப் போரை எதிர்கொள்வதற்காக இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது என்ற வாதம் வலுவிழக்கிறது. ஆனால் புறக்கணிக்க முடியாது.
இலங்கையில் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்வது. பெயரளவில் சமாதானத்திற்கான யுத்தம் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும் நடைமுறையில் தமிழ் மக்களை கொன்று ஒழிப்பதற்கும் கடல் கடந்து தப்பி ஓடச் செய்வதற்கும் என நேரடி மற்றும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை செய்வதற்கு இராணுவம் பயன்படுத்தப்படுவதை வரலாற்றின் பக்கங்களில் இரத்தமும் சதையுமாக கண்ணீரும் துயரமுமாக காணலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக 2006 இற்குப் பின்னர் வெடித்த யுத்தத்தில் நிலங்களைப் பிடிப்பதற்குப் பதிலாக ஆட்களை கொல்வதையே இந்த யுத்தத்தின் மூலோபாயமாக கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா கூறியதையும் அதன்படி ஒரு இலட்சத்தி ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு 2009 வரை சமாதானத்திற்கான யுத்தம் என்றோ பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றோ முழக்கங்களை எழுப்பிக்கொண்டு நடைமுறையில் தமிழ் மக்களை நேரடியாக படுகொலை செய்யவும் அதற்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்தவும் இராணுவம் தேவைப்பட்டது. அதனால் அது வளர்க்கப்பட்டது.
ஆனால் 2013 இன் பின்னர் அதுவும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழித்த பின்னர் இத்தகைய அளவுக்கு அதிகமான இராணுவ எண்ணிக்கை ஏன் என்ற கேள்வி முக்கியமானது. 2009 இன் பின்னர் நேரடி இன அழிப்பிற்கான தேவை மாற்றமடைந்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வெளி இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாதமும் இராணுவ அர்த்தத்தில் வலுவற்றதாக காணப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களை முற்றாக அழித்தொழிக்கும் இராணுவத்தின் வேலை இன்னமும் முற்றுப்பெறவில்லை. ஆகையால் நேரடி யுத்தம் அல்லாத கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இராணுவ மூலோபாயமாக்கியிருக்கிறார்கள். அதனை உறுதிப்படுத்துவதுபோல் தான் அண்மைக்கால சம்பவங்களும் காணப்படுகின்றன.
இலங்கையில் தற்போதைய மொத்த இராணுவ எண்ணிக்கையில் மூன்றில் இரண்டிற்கும் அதிகமான இராணுவத்தினர் தமிழர் தாயகப்பிரதேசங்களை மையப்படுத்தி செயற்பாட்டில் உள்ளார்கள். பெயரளவில் ஒரு சில இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டிருந்தாலும் கட்டமைப்பு அளவில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அண்ணளவாக நான்கு தமிழ் மக்களிற்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழர் பிரதேசங்களில் முன்பள்ளிகளை நிர்வகிப்பது தொடக்கம் கல்வி பொருளாதாரம் விளையாட்டு சுகாதாரம் என அத்தனை அடிப்படை சமூக மற்றும் மக்களாட்சிக் கட்டமைப்புக்களிலும் இராணுவம் செல்வாக்குச் செலுத்துகிறது. சிவில் கட்டமைப்புகளை வளர்ச்சியடையவிடாமல் முடக்கி வைத்திருக்கிறது இராணுவம். இந்த நிலையைப் பழக்கப்படுத்தி நாளடைவில் வழக்கமான ஒன்றாக மாற்றியமைத்து விடுவார்கள். இப்போது பாடசாலைகளில் கொரோணாவிற்கு மருந்து அடிப்பதற்கு வரும் இராணுவம் ஆபத்பாண்டவராக தோன்றலாம். அதே பாடசாலைகளை கொரோணா முகமாக மாற்றுவதுகூட யதார்த்தமானதாக தோன்றலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சிவில் சமூகமும் மக்களாட்சிக் கட்டமைப்புக்களுமாகத்தான் இருக்கவேண்டும். தேவை ஏற்பட்டால் இராணுவம் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கலாம். அவ்வாறு தான் உலகம் முழுவதும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழர் தாயகத்தில் நிலமை அவ்வாறு அல்ல. நாளாந்த வாழ்வில் அண்ணளவாக ஐந்தில் ஒருவராக இராணுவம் கலக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா உடலைத் தாக்கி செயல் இழக்கவைப்பதுபோல் கலந்திருக்கும் இராணுவத்தால் தமிழ் மக்களை கரைத்து அழிக்கமுடியும். இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையின் அசுர வளர்ச்சியும் தமிழர் தாயகப்பிரதேசங்களில் அதன் செறிவாக்கமும் தமிழ் இனத்தை கலந்திருந்து கரைத்து அழிப்பதற்கான மூலோபாய நகர்வுகள். இவ்வாறு கலந்திருக்கும் இராணுவ எண்ணிக்கை அதிகரிப்பால் எந்நேரமும் எழக்கூடிய பேராபத்தை நிகழ்காலத்தில் பட முன்னோட்டம் போல் பார்க்க கொரோனா உதவியிருக்கிறது.
வாய்ப்பாக வரும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செய்வதையும் நேரடி இன அழிப்புச் செய்வதையுமே இலக்காக கொண்டு இலங்கை அரச இயந்திரத்தின் மகாசங்கமும் இராணுவமும் என்ற இரண்டு சக்கரங்களும் சுழலும் என்பதை உலகின் முன் நிறுவி தமிழ் மக்களை பேராபத்தில் இருந்து உடனடியாக பாதுகாக்கவேண்டும்.