சுவிஸ் கூட்டாட்சி அரசின் முக்கிய முடிவுகள்!- இன்றைய ஊடகமாநாட்டில்.
1. இடைவெளி மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்தும் பேணுதல்.
சுவிஸ் வழமைக்குத்திரும்புவது சுவிஸ் கூட்டாட்சியின் கண்காணிப்பிற்கு கீழே இடம்பெறத் தொடங்கியுள்ளது. கூட்டாட்சியின் உத்தரவிற்கமைய அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கும் வண்ணம் அனைத்து நிறுவனங்களும், கடைகளும் செயற்பட வேண்டும்.
2. அவதானமான வகையில் மே 11 உணவகங்கள் அனைத்தும்
திறக்கப்படுகின்றன.
உணவகங்களில் ஒரு மேசையில் பெற்றோரும், பிள்ளைகளும் அல்லது ஆகக்கூடியது நான்கு பேர் மட்டுமாக வாடிக்கையாளர்கள் அமர முடியும். ஒரு மேசையில் இருந்து அடுத்த மேசை 2 மீற்றர் இடைவெளியில் போடப்பட வேண்டும். இது தொட்பான மேலதிக முடிவுகளை பற்றி மே 27 அன்று கூட்டாட்சியினால் அறிவிக்கப்படும்.
3. விழாக்கள் நடாத்துவது தொடர்பாக மே 27 அன்று முடிவுகள் எடுக்கப்படும்.
மே 27 அன்று ஆயிரத்திற்கும் குறைந்தவர்கள் ஒன்றுகூடும் விழாக்கள் நடாத்துவது பற்றி சுவிஸ் கூட்டாட்சி முடிவுகள் எடுக்கப்போகின்றது. எனினும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடும் விழாக்களில் வைரஸ் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம், இடைவெளி மற்றும் சுகாதாரத்தை இவ்வாறான விழாக்களில் கடைப்பிடிப்பது கடினம் போன்ற காரணங்களால் ஆகஸ்டுக்கு முன்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை என சுவிஸ் கூட்டாட்சி அறிவித்துள்ளது.
4. மே 11 தொடக்கம் உடற்பயிற்சிகள் ஆரம்பிக்கப்படலாம்.
ஒருவரை ஒருவர் தொடுகையற்ற நிலையில் ஆகக்கூடியது 5பேர் கொண்ட குழுக்களாக உடற்பயிற்சி நிலையங்களிலும், விளையாட்டுக்கழகங்களிலும் விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் நடாத்தப்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கும் இடைவெளி மற்றும் சுகாதாரத்தை பேணுவது அவசியமாகும். சுவட்டுமைதான விளையாட்டுக்களில் 5பேரிற்கு மேற்பட்டோரும் கலந்து கொள்ள அனுமதியுள்ளது. யூன் 8 தொடக்கம் விளையாட்டை தொழில் முறையாகக் கொண்டவர்களிற்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிப்பது பற்றி கூட்டாட்சி சிந்திக்கின்றது. இது தொடர்பில் முடிவெடுக்கவில்லை.
5. உயர்கல்வி இறுதித்தேர்வுகளிற்கும், மற்றும் தொழிற்கல்வி சிறப்புத்தேர்வுகளிற்கும் ஏற்கெனவே நடாத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் முக்கியம்.
உயர்கல்வி இறுதித்தேர்வுகளில் வாய்மொழித்தேர்வுகள் நடத்துவதற்கு அனுமதியில்லை. எனினும் எழுத்துத்தேர்வுகள் தொடர்பாக மாநிலரீதியில் முடிவுகள் எடுக்கப்படலாம். இந்த எழுத்துத்தேர்வுகள் தவிர்க்கப்படுவதற்கும் அனுமதியுள்ளது.
2020 இன் தொழிற்கல்வி சிறப்புத்தேர்வுகள் நடாத்த அனுமதியில்லை. இதற்கு முழுமையாக கூட்டாட்சி பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
6. கட்டாயப்பாடசாலைகள் தொடர்பாக மாநிலங்கள் முடிவுகளை எடுக்கலாம்.
மே 11 தொடக்கம் கட்டாயப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இதற்காக கல்வித்திணைக்களமும், கூட்டாட்சியும் இணைந்து பாதுகாப்பு திட்டங்களை முடிவெடுத்துள்ளது. தொழிற்பள்ளிகளிலும், உயர்பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆகக்கூடியது 5 பேர் ஒன்றுகூடும் வகையில் வகுப்புகள் நடாத்தப்படலாம். இடைவெளி மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் தேர்வுகள் நடைபெறலாம். யூன் 8 தொடக்கம் அனைத்து மாணவர்களும் ஒன்றாக வகுப்புகளில் கற்கையினைத் தொடங்கலாம்.
7. மேலும் 1,9 பில்லியன் பிராங் -சுவிஸ் மற்றும் ஏடெல்வைஸ் பயணிகள் வானூர்திச்சேவைக்கு வழங்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட முடிவுகள் கொரோனா கொவிட்- 19 இடர்கால நிலமையைக் கருத்தில் கொண்டு சுவிஸ் கூட்டாட்சி அரசு 29.04.2020 புதன்கிழமை (இன்று) நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் கூறியுள்ளது.
மொழிபெயர்ப்பு: நிதுர்ஷனா ரவீந்திரன்
Translated by Nithurshana Raveendran
Source: BAG,
பதிவு Suthan Sutheswaran.