சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய….. கிருமிநாசினியை திருடிய இத்தாலி!!
சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய லொறி ஒன்றை இத்தாலி தனது எல்லையில் பிடித்து அதிலிருந்த கிருமிநாசினியை கைப்பற்றிக்கொண்டுள்ளது.
இந்த ’திருட்டு’ தொடர்பாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர் Ignazio Cassis நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சுவிஸ் நிறுவனமான Victory Switzerland, உலகம் முழுவதிலுமிருந்து பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது.
அப்படியிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து ஆர்டர் செய்து பணமும் செலுத்திவிட்ட பொருட்கள் அடங்கிய லொறியை சுவிஸ் இத்தாலி எல்லையில் மடக்கிய இத்தாலி, அதிலுள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
அந்த லொறியில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ஜெல் இருந்ததாகவும், அதை இத்தாலி சுங்கத்துறையினர் எடுத்துக்கொண்டதாகவும் Victory Switzerlandஇன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தாலி சுங்க அதிகாரிகள் அந்த பொருள் கொரோனா அவசரத்திற்கு உதவுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அவை மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Victory Switzerland நிறுவனம், அந்த பொருட்களை ஜேர்மன் நிறுவனமான Gifts & Beauty Handels என்ற நிறுவனத்திடம் மூன்று வாரங்களுக்கு முன்பே ஆர்டர் செய்திருந்தது.
அவற்றிற்காக 30,000 சுவிஸ் ஃப்ராங்குகளும் செலுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ஜேர்மனியிடம் ஆர்டர் செய்திருந்தாலும், அவை தயாரிக்கப்பட்டது இத்தாலியில்தான்.
அகவே, இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைய இருக்கும்போது இத்தாலி அதிகாரிகள் அவற்றை மடக்கிவிட்டார்கள்.
இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கான தொகையை திருப்பிச் செலுத்திவிடுவதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலி மொழி பேசும் சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, இத்தாலி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.