கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது.
தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக ஈக்வடார் உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான குவயாகீலில், நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பல, மருத்துவமனைகளில் கேட்பாரட்று கிடப்பதாகவும், சில உடல்கள் வீடுகளிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல இடங்களில் உடல்கள் பிளாஸ்டிக் காகிதங்களில் சுற்றப்பட்டும், அட்டைப்பெட்டியில் திணிக்கப்பட்டும் தெருக்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் இணையதளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், தன் பெயர் கேப்ரியெல்லா என கூறும் பெண்மணி ஒருவர், தன்னுடைய கணவரின் உடலை வீட்டிலிருந்து மீட்குமாறு அரசு அதிகாரிகளிடம் கெஞ்சுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
வீடுகளில் இந்த நிலை என்றால், அந்நகர மருத்துவமனைகளின் பிணவறைகளில் கொரோனா நோயாளிகளின் உடல்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக உடல்களை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய கண்டெய்னர் அளவிலான மூன்று குளிர்சாதன பெட்டிகளை அந்நாட்டு அரசு பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஒரே நேரத்தில் அதிகளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் கட்டமைப்பு தங்களிடம் இல்லை என அந்நகரில் உள்ள மருத்துவமனை ஒன்று தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.