Mai 4, 2024

சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருக்கும்படி மலேசிய சுகாதார அமைச்சு ஆலோசனை


சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பிலிருக்கும் வேளையில், அவர்கள் நாடு திரும்ப வேண்டாம் என்றார் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Noor Hisham Abdullah).

இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இரு நாட்டு அரசாங்கங்கள் அது குறித்துக் கலந்து ஆலோசித்துவருவதாகத் தெரிவித்தார்.

மலேசியாவுக்குத் திரும்ப விரும்புவோர், சுங்கச்சாவடிகளில் மருத்துவ சோதனைகளுக்கு ஆளாக்கப்படுவர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

மலேசியா திரும்ப விரும்புவோர், கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மைல் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) கூறினார்.

இருதரப்புத் தொடக்க ஒப்பந்தத்தில் அது இடம்பெற்றிருப்பதை அவர் சுட்டினார்.