வீட்டு தோட்டத்தை வலியுறுத்தும் சி.வி
கேள்வி – தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? தொடர்ந்து மக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை எவ்வாறு நாம் சமாளிக்கப் போகின்றோம்?
பதில் – கொரோனா வைரசின் தாக்கம் மாதக் கணக்கினுள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட அதனால் ஏற்படுத்தப்பட்ட உலக ரீதியான, நாடுகள் ரீதியான, மாகாணங்கள் ரீதியான, கிராமங்கள் ரீதியான, குடும்பங்கள் ரீதியான தாக்கங்கள் பல காலத்திற்கு எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. உண்மையில் மனித சமூகமே ஒரு கலக்கல் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நாம் யாவரும் இதுகாறும் எமது பயணத்தில் தங்குமிடம் இல்லாமல் வேகப் பயணத்தில் ஈடுபட்டிருந்தோம். எங்கும் எதிலும் வேகம் மட்டுமல்ல சுயநலமே அந்த வேகத்தின் உந்து சக்தியாகவும் இருந்து வந்துள்ளது. மனிதர்கள் இதுகாறும் வாகனங்களில் விழுந்தடித்துக் கொண்டு சென்ற தெருக்களில் மிருகங்களும் பறவைகளும் ஜந்துக்களும் சாவகாசமாகப் பவனிவருவதை வலைப் பின்னல்களில் காணும் போது எந்த அளவுக்கு எமது சுயநலம் மற்றைய உயிரினங்களை கவனத்திற்கெடுக்காமல் தான்தோன்றித் தனமான பாதையில் சென்று கொண்டிருந்தது என்பதை உணர வைத்துள்ளது.
கொரோனாவை அழித்தொழிப்பதில் இன்று பூகோள ரீதியில் ஒற்றுமை ஏற்பட்டிருக்கின்றபோதிலும், துரதிர்ஷ;டவசமாக இந்த நிலைமை தொடரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. கொரோனாவின் தாக்கம் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகள் என்று ஒட்டுமொத்த உலகத்தினதும் பொருளாதாரத்தை புரட்டிபோட்டிருக்கின்றது. இன்னமும் சில மாதங்களுக்கு இந்த நிலைமை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமடையும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பதே எமது எதிர்பார்ப்பு. கொரோனாவின் அச்சுறுத்தல் முடிவடைந்த கையோடு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கடும் போட்டி உலகளாவியரீதியில் ஏற்படும். இதில் மூல வளங்களை சுரண்டுவதற்கான போட்டா போட்டி முக்கிய இடம்பெற வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, ஒரு சில நாட்களுக்கு முன்னர் சீனாவுடன் பேசி பல லட்சம் முக மூடிகளை கொள்வனவு செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், பிரான்ஸை நோக்கி சரக்கு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த இறுதி தருணத்தில் அமெரிக்கா நான்கு மடங்கு கூடுதல் விலைபேசி அனைத்து முக மூடிகளையும் தனது நாட்டுக்குக் கொண்டுசென்று விட்டது. உயிர்வாழ்தலுக்கும், பொருளாதாரத்துக்குமான போட்டியானது ஒழுக்க விதிகள், மரபுகள் எல்லாவற்றையும் மீறி இப்பொழுதே தலை தூக்க ஆரம்பித்துவிட்டதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. காரணம் உலகின் எந்த நாட்டை விடவும் கொரோனாவின் உக்கிரம் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது. அவர்களை பொறுத்தவரையில் சுய பாதுகாப்பு முதலிடம் பெறுகிறது. ஆகவே, இதனால், நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளும் நாடுகளுக்கு உள்ளேயான இன, மத ரீதியான முரண்பாடுகளும் எதிர்காலத்தில் பெரியளவில் கூர்மை அடையக்கூடும் என்பதே எதிர்பார்ப்பு. இதனால் உலக ஒழுங்கிலும், சர்வதேச உறவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். ஏற்கனவே இலங்கையில் இன ரீதியாக பெரும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்குந் தமிழ் மக்களுக்கு இதனால் பாதகமான பல விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதை நாம் இப்போதே உணர்ந்துகொண்டு எம்மை நாம் சுதாகரித்துக்கொள்ள வேண்டும். ஆகவே, சரியான திட்டமிடல்களையும் முற்காப்பு நடவடிக்கைகளையும் நாம் இப்பொழுதிருந்தே மேற்கொள்ளவேண்டும்.
வடகிழக்குத் தமிழ் மக்கள் இதுகாறும் பலவிதமான சிக்கல் நிலைகளுக்கு முகம் கொடுத்து அவற்றில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பிரச்சனைகள் என்று கூறும் போது எமது பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவே முக்கியத்துவம் பெறுகின்றது. மக்களின் வாழ்வு நிலையைத் தொடர வைக்க நாம் உடனே என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இன்றைய முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. கொரோனாவிடம் இருந்து எம்மைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய வழிமுறைகளை அரசாங்கமும் எமது மருத்துவர்களும், தனியார் அமைப்புக்களும் நாள் தோறும் விளக்கிக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் எமது அன்றாட உணவுத் தேவைகளை இனிவரும் மாதங்களில் எவ்வாறு உறுதிப்படுத்தப் போகின்றோம் என்பதே எமது தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை ஏறிச் செல்கின்றது.
யுத்த காலத்தில், போருக்கு அப்பால், மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் நடைமுறையில் இருந்து வந்தமை அனைவர்க்கும் நினைவிருக்கும். அது போன்று வடக்கு, கிழக்கு மக்களை ஒன்றிணைத்து இங்கு வாழ் மக்களிடையே தற்சார்பையும் தன்நிறைவையும் அடையாளப்படுத்தி மேம்படுத்த வேண்டிய அவசியமும் அவசரமும் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர் எமது உறவுகள் உற்ற துணையாகச் செயல்படவேண்டும். புத்திமான் பலவானாவான் என்பது சான்றோர்கள் பழமொழி.
ஆனால் அறிவால் சிறந்து விளங்கும் மக்களிடையே பொதுவாக ஒற்றுமை என்பது அரியதொரு பாண்டமாகும். அறிவின்பால்ப்பட்டவர்கள் சாதாரணமாக தாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்க்கிலும் அறிவால் மேம்பட்டவர்கள் என்று எடுத்துக் காட்டவே முனைவார்கள். அதே நேரம் மற்றவர்கள் தங்களிலும் பார்க்க ஒரு சிறந்த இடத்தைப் பெறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். சிறப்புடையவரை கீழே இழுத்து விழுத்தி அவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே பார்ப்பார்கள். இந்தக் காரணத்தால்த் தான் போலும் இறைவன் சமூக இடர்களை, சர்வதேச இடர்களை இருந்திருந்துவிட்டு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நம்புகின்றேன். பேரிடர்கள் வரும் போது கூட ஒன்றிணையாத மனித கூட்டங்கள் அவமானத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள். இதனை நான் கூறுவதற்குக் காரணம் உண்டு. இன்று எம் மக்களிடையே ஒரு நெருக்கம், ஒரு சகோதரத்துவம், ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியன ஏற்பட வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது. ஒரு பக்கம் சர்வாதிகாரத்திற்கு வித்திடக்கூடிய நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மறுபக்கத்தில் நாம் ஒற்றுமையற்று, ஓர்மையற்றுப் பிரிந்து வாழத் தலைப்பட்டுள்ளோம். இது எமது வருங்காலத்திற்கு நன்மை பயக்காது.
இன்றைய பேரிடர் எம்மை ஒன்று சேர்க்க வேண்டும். ஒருமித்த கருத்துடன் எமது எதிர்கால சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்க உறுதுணையாய் அது அமையவேண்டும். சுநாமியானது ஒரு சில நாட்களுக்கு அரசபடைகளையும் புலிப்படையையும் ஒருமித்து செலாற்ற வைத்தது போல் நாம் யாவரும் எமது வருங்காலம் கருதி ஒருமித்துப் பயணிக்க முன்வரவேண்டும். இதற்கு அடிமட்ட நிலையில் மக்கள் ஒன்று சேர வேண்டும்.
நாம் தமிழர்கள் என்ற முறையில் எமக்குள் தன்னிறைவை ஏற்படுத்த நாம் இந்தப் பேரிடரைக் காரணமாக வைத்து முயற்சிக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தொழில் ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும், சந்தைப்படுத்தல் போன்றவை ரீதியாகவும் எம்முன் உருவாக வேண்டும்.
எமது விவசாயிகள் உடனே பயறு, உழுந்து போன்ற 03 மாதப் பயிர்களை தமது நிலங்களில் விதைக்க வேண்டும். வீட்டுத்தோட்டம் செய்பவர்கள் மரக்கறி வகைகள், கீரை வகைகளை மற்றும் மரவள்ளி போன்ற செடிகளை உடனே வளர்க்க முன்வர வேண்டும். இந்தப் பிரச்சனை வந்த உடனேயே நான் எனது வீட்டுக் காணியில் ப்ளாஸ்டிக் தொட்டிகளில் கத்தரி, வெண்டி, புடோல், பாகல், தக்காளி, மிளகாய் போன்ற பல செடி கொடிகளையும் கீரை வகைகளையும் வளர்க்கத் தொடங்கிவிட்டேன். மரவள்ளியை ஆங்காங்கே நாட்டியுள்ளேன். விரைவில் இவற்றில் இருந்து அறுவடை கிடைக்கப் போகின்றது. கொழும்பில் பல தொடர்மாடிக் கட்டிடங்களில் தொட்டிகளில் மரக்கறிகள் யப்பான் போன்று வளர்க்கின்றார்கள்.
இவ்வாறு எம் மக்கள் மற்றவர்களை எதிர்பாராது தமது சுயதேவைகளைத் தாமே பூர்த்தி செய்யும் வகைகளில் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்க முன்வரவேண்டும். சனசமூக நிலையங்கள் இந்தத் தொழிற்பாட்டை ஊக்குவிக்க முன்வரவேண்டும். நல்ல ரக விதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தல், இரசாயனக் கலப்பற்ற உரத்தைப் பகிர்ந்து கொடுத்தல், இரசாயனம் கலவாத பூச்சி நாசினிகளை அறிமுகப்படுத்தல் போன்ற பல நடவடிக்கைகளில் அவை ஈடுபடலாம். வீட்டுத் தோட்டங்கள் காலா காலத்தில் பயன்தரும் நிலையில் உள்ளூர் மக்களிடையே தொடர்பை ஏற்படுத்தி பயன்களைப் பகிர்ந்து கொள்ளவும் வளமான உறவு நிலையை உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்தவும் சனசமூக நிலையங்கள் உறுதுணையாக நிற்கலாம்.
மொத்தத்தில் இன்றைய இடர்நிலை எம்மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வழி அமைக்க வேண்டும். தன்னம்பிக்கையை எம் மக்களிடையே வளர்க்க உறுதுணையாக நிற்க வேண்டும். தன்னிறைவை எம் மக்கள் பெற வழி செய்து கொடுக்க வேண்டும். கொரோனா நெருக்கடி நிலை படிப்படியாகத் தணிந்து போகும். ஆனால் தன்நிறைவுக்கான எமது நடவடிக்கைகள் உடனே முழுமூச்சுடன் எம் எல்லோரதும் மத்தியிலும் நடைமுறைப்படுத்த இறைவன் துணைபுரிய வேண்டும்.